ரகுல்: வெற்றியைத் தக்க வைப்பதே பெரும் சவால்

3 mins read
c0064611-08da-448d-9baa-77e489f15f28
ரகுல் பிரீத் சிங். - படம்: ஊடகம்

சிறு வயது முதல் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்று தாம் கனவு கண்டதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்.

அந்தக் கனவும் கடும் உழைப்பும்தான் தாம் விரும்பியபடி சில உயரங்களை எட்டிப்பிடிக்க கைகொடுத்ததாகச் சொல்கிறார்.

மேலும், தன்னுடைய குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையில் எதையும் சாதித்திருக்க முடியாது என்றும் தனது வெற்றிகள் அனைத்தும் குடும்பத்துக்குச் சொந்தமானவை என்றும் வடஇந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரகுல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“தொடக்கத்தில் மாடலிங் துறையில்தான் என் கவனம் இருந்தது. அதன் பிறகு ‘மிஸ் இந்தியா’ உள்ளிட்ட அழகிப் போட்டிகளிலும் பங்கேற்றேன்.

“திரையுலகில் நுழைவது குறித்து யோசித்தபோது, நம்மால் முடியுமா என்ற மலைப்பு தொடக்கத்தில் இருந்தது. மேலும், திரையுலகம் குறித்து எந்தத் தகவலும் அறவே தெரியாது.

“எனினும் தயக்கத்தை உதறிவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தேன். மற்ற துறைகளைப் போன்று திரையுலகிலும் பல்வேறு சவால்கள் உள்ளன. எனது திரைப் பயணத்தில் எத்தனையோ மேடு பள்ளங்கள், நிராகரிப்புகளை எதிர்கொண்டேன்.

“நடிகர்களைத் தேர்வு செய்ய படக்குழுவுக்கு உதவும் முகவர்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. நமக்கு தெரிந்த அல்லது வாய்ப்பு அளிப்பதாகக் கூறிய இயக்குநர்களை விடாமல் தொடர்புகொள்ள வேண்டும்.

“சில முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், கடைசி நேரத்தில் என்னை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அத்தகைய ஏமாற்றங்கள் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களை நிலைகுலையச் செய்துவிடும்,” என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

எனினும், இதுபோன்ற அனுபவங்கள்தான் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் விதைக்கும் என்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதாகவும் அதன் பலனாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரகுல்.

தமது நீண்ட திரைப் பயணத்தில் ஓர் உண்மையைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் சில கசப்பான அனுபவங்கள் இந்தப் புரிதலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

“திரையுலகில் கதாநாயகி ஆவது எளிதான காரியம் அல்ல. தடைகளை மீறி வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை தக்க வைத்துக்கொண்டு, திரையுலகில் நிலைத்து நிற்பதற்கு கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். இதுதான் பெரும் சவால். இதுதான் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம், புரிந்துகொண்ட உண்மை.

“ஒவ்வொரு பிரச்சினையும் அழகான, அர்த்தமுள்ள பாடங்களைதக் கற்றுக் கொடுத்தன. கடினமான காலகட்டங்களில் குடும்பம் துணையாக இல்லாவிட்டால் என்னால் சாதித்துக் காட்டியிருக்க முடியாது,” என்று சொல்லும் ரகுல், தற்போது சிவகார்த்திகேயனுடன் `அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்துக்கான படப்பிடிப்பின்போது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவம் கிடைத்ததாகச் சொல்கிறார்.

“இந்தப் படத்தில் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரம் உள்ளது. படப்பிடிப்பின்போது யாரும் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. ஆனால் வேற்றுக்கிரகவாசி இருப்பதாக ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகளைப் படமாக்கினோம்.

“படத்தை திரையில் பார்த்தபோது மிரண்டு போனேன். அந்த அனுபவத்தை மறக்கவே இயலாது. சிவகார்த்திகேயன் சிறந்த நடிகராக உருவெடுத்துள்ளார். அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் நேசிக்கிறேன்,” என்றும் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்