‘அயலான்’: எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்

2 mins read
8fe489e2-d9fc-419d-b745-0f894f8f50a4
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

‘அயலான்’ படத்தில் சம்பளம் பெறாமல் நடிக்க தாம் முன்வந்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் ஒரு மாறுபட்ட முயற்சியாக இந்தப் படம் உருவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ளது ‘அயலான்’ படம். சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம், சில பிரச்சினைகளால் இடையில் முடங்கியது.

இதையடுத்து இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையின்போது படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் எதிர்வரும் பொங்கலுக்கு படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனும் இதை உறுதி செய்துள்ளார். ஐந்து ஆண்டுகளாகத் தயாரிப்பில் உள்ள இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஒருமுறை பணப் பிரச்சினையில் சிக்கியது. அப்போது சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் என்றேன். பணத்தை இழந்தாலும் ரவிக்குமார் எனும் சொத்தைச் சம்பாதித்துள்ளேன்,” என்றார்.

மேலும், ‘அயலான்’ படத்தை அடுத்து மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் தாம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்தார்.

“இப்படத்தில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான காட்சிகள் உள்ளன. இதற்கு முன்னர் காலஞ்சென்ற முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டார். வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

“அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் வேறு யாரும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் இல்லை. எம்ஜிஆருக்குப் பிறகு நாங்கள்தான் முயற்சி செய்துள்ளோம்.

“உடனே ‘எம்ஜிஆருக்குப் பிறகு நான்தான்’ என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்று செய்தி போட்டுவிடாதீர்கள்.

“இது குழந்தைகளுக்கான படம் எனலாம். மேலும், குழந்தை போன்ற மனம் கொண்டவர்களுக்கான படம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகளுக்குத் தவறான விஷயங்களைச் சொல்லும் படமாக இருக்காது.

“இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கபலமாய் இருந்தார். அவரது இசை படத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது,” என்றார் சிவகார்த்திகேயன்.

‘அயலான்’ படத்தில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.

எனினும், அடுத்தடுத்து முளைத்த பிரச்சினைகளால் பட வெளியீடு பலமுறை தள்ளிப் போனது.

இந்நிலையில், குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“எதிர்வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டோம். ஆனால் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் முடிவடையவில்லை. எனவேதான், பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

“ரவிக்குமார் தமிழ் வழியில் கல்வி படித்தவர். அறிவியல் சார்ந்த பல்வேறு விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தையும் 95 நாள்களிலேயே படமாக்கிவிட்டார். அவரது உழைப்பும் மற்ற அனைவரது பங்களிப்பும் வீண்போகாது. ‘அயலான்’ பொங்கலன்று ரசிகர்களை நிச்சயமாகச் சந்திப்பான்,” என்றார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்