தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அண்ணா’ என்று அழைத்த விஜய்: லோகேஷின் ‘லியோ’ பட அனுபவங்கள்

3 mins read
9e84cd97-6161-4ffb-88ee-906f525dd932
‘லியோ’ படப்பிடிப்பில் விஜய், திரிஷா. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் எப்போதுமே இயக்குநரின் பணிகளில் தலையிடுவதில்லை என்றும் அவருடன் பணியாற்றும்போது முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியும் என்றும் சொல்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்துக்காக பூசை போட்ட நாள் தொடங்கி, தணிக்கைச் சான்றிதழ் பெறும் வரை விஜய் உடன் இருந்தது பெரும் பலம் அளித்தது என்று ‘லியோ’ படம் குறித்து ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘லியோ’ படத்துக்கு முதலில் ‘ஆண்டனி’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் அதே பெயரில் வேறு ஒரு படம் தயாராகிவிட்டது.

“சிங்கத்தையும்கூட ‘லியோ’ என்று குறிப்பிடுவார்கள். இதுவரை யாரும் இந்தத் தலைப்பை பயன்படுத்தியதில்லை. மேலும் சுருக்கமாகவும் இருப்பதால் தேர்வு செய்தோம்.

“பொதுவாக ஒரு படத்துக்கான பணிகளைத் தொடங்கியது முதல் கடைசி வரை நம் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்கிற பயம் இருக்கும். ஆனால் விஜய் அண்ணா (இப்படித்தான் குறிப்பிடுகிறார் லோகேஷ்) என்கூடவே இருந்ததால் திட்டமிட்டபடியே படத்தை எடுத்து முடித்துள்ளோம்.

“கதை, திரைக்கதை, வசனங்கள் என அனைத்தையும் விஜய் அண்ணாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் போதும். அவரைப் போல் அனாயாசமாக செயல்படக்கூடிய ஒருவரைப் பார்க்க முடியாது.

“மேலும், ‘எனக்கு இந்த மாதிரி காட்சிகள் வேண்டும்’ என்று அவரிடம் இருந்து எந்தப் பரிந்துரையும் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு இயக்குநருக்கு சுதந்திரம் கொடுப்பார்.

“கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை எடுப்பதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ஒப்பந்தமாகி இருந்தேன்.

“அந்தச் சமயத்தில் ரஜினி ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் கிடைத்த இடைவெளியின்போது ‘விக்ரம்’ படத்தை எடுத்து முடித்தேன்.

“ஆனால் ‘லியோ’ படத்தின் கதையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதும் சிறு சிறு மாற்றங்களை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

“படப்பிடிப்பின்போது நான், விஜய் அண்ணா, உதவி இயக்குநர்கள் என்று அனைவரும் சினிமா பற்றித்தான் அதிகம் பேசுவோம். அப்போது அவர் நிறையவே கிண்டலடிப்பார். சமூக ஊடகங்களில் குறிப்பிடுவதுபோல், ‘லோகிண்ணா, லோகிண்ணா’ என்றுதான் அழைப்பார். அதனால் படப்பிடிப்பு அரங்கு எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.

“இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத் என் மீது மிகுந்த பாசம் காட்டினார். என்னை அவரது மகனாகக் கருவதாகச் சொன்னவர், தன்னை அப்பா என்று அழைக்கும்படியும்கூட கேட்டுக்கொண்டார்.

“இப்போது பட வேலைகள் முடிந்துவிட்ட போதிலும், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் நான் தொடர்புகொள்ளவில்லை என்றால், உடனே கைப்பேசியில் அழைத்துவிடுவார்.

“இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் ஜோடி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, பிரியா ஆனந்த் நினைவுக்கு வந்தார்.

“ஏற்கெனவே ‘விக்ரம்’ படத்தில் கமலின் மருமகள் கதாபாத்திரத்துக்கு பிரியாவைத்தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை.

“நடனப் பயிற்சியாளர் சாண்டி மாஸ்டருக்குள் ஒரு நடிகர் இருப்பது எனக்கு ‘விக்ரம்’ படத்தின்போதே தெரியும். என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சாண்டியிடம் அப்போதே கூறிவிட்டேன்.

“இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிகராகவும் வலம் வருவார்,” என்று லோகேஷ் கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்