‘அவர்களை வெறுக்கிறேன்’

3 mins read
ec7cfa07-b1ed-400f-9a5a-ec014f5998ef
நித்யா மேனன். - படம்: ஊடகம்

செய்தியாளர்கள் மீது தாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் நித்யா மேனன்.

அதேசமயம், கிசுகிசு எழுதுபவர்களை எல்லாம் தம்மால் செய்தியாளராகக் கருத முடியாது என சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் திரையுலகில் நிலவும் பாலியல் தொல்லை தொடர்பாக நித்யா மேனன் தெரிவித்த கருத்து, ஊடகம் ஒன்றில் தவறான கோணத்தில் வெளியாகி இருந்தது.

இதனால் சங்கடம் அடைந்த அவர், அது குறித்து விளக்கம் அளித்தார். அவர் செய்தியாளர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில், தாம் சிறு வயதில் செய்தியாளராக உருவாக வேண்டும் என்று விரும்பியதை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார் நித்யா.

“நான் எப்போதுமே செய்தியாளர்களிடம் வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறேன். அவர்களால் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுக முடியும் என்பதும் எத்தகைய கேள்விக்கும் நான் தயக்கம் இன்றி பதில் அளிப்பேன் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

“கிசுகிசு எழுதுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்களைச் செய்தியாளர்களாகக் கருதுவதே இல்லை. அப்படிப்பட்ட சிலரால் எனக்கும் ஊடகத் துறைக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படாது.

“ஊடகத் துறைக்கான நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் செய்தியாளர்களிடம் மட்டுமே நான் பேசுவேன்,” என்று கூறியுள்ளார் நித்யா.

‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்குப் பிறகு இவரை நேசிக்கும் தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிராமப்புறப் பெண்ணாக வெள்ளந்தி கதாபாத்திரங்களில் நடிக்கக் கேட்டு பல இயக்குநர்கள் அணுகிறார்களாம். ஆனால், நகரத்தில் பிறந்து வளர்ந்த தமக்கு, அதுபோன்ற வேடங்கள் ஒத்து வருமா என்ற சந்தேகம் இருப்பதாகச் சொல்கிறார்.

“நான் கிராமத்துப் பெண்ணைப் போல் நடித்தபோது நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் கதாபாத்திரத்துக்குத் தேவையானபடி நடிக்கவில்லை. மாறாக, எனக்குத் தெரிந்த பாணியில் நடித்தேன்.

“அது நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுடன் ஒத்துப்போனது. இதை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் கிராமத்துக் கதைகளை விவரித்தால், எடுத்த எடுப்பிலேயே எனக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் ஒத்து வராது என்று சொல்லிவிடுவேன்.

“இவ்வாறு வெளிப்படையாகப் பேசுவதால் எனக்குரிய வாய்ப்புகள் பறிபோனாலும் அது குறித்து நான் கவலைப்படுவதில்லை,” என்கிறார் நித்யா மேனன்.

ஒரு கதையைக் கேட்கும்போதே அதில் தனக்கான கதாபாத்திரத்துக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவாராம் நித்யா.

மேலும், முழுக் கதையையும் கேட்டு முடித்த பின்னர் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே அதில் நடிக்க சம்மதிக்கிறார்.

தன்னைப் பற்றிய கிசுகிசுக்கள், தனது நடிப்பு குறித்த எதிர்மறை விமர்சனங்கள் ஆகியவற்றை அறவே கண்டுகொள்வதில்லை என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய போக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை எதிர்மறை விமர்சனங்களால் நாம் நிலைகுலைந்து விடக்கூடாது. மாறாக, நமது போக்கில் சென்று கொண்டிருந்தால் விமர்சிப்பவர்கள் ஒரு கட்டத்தில் தாமாக அடங்கிவிடுவார்கள்.

“இதை உறுதியாக நம்புவதால் இந்த வழியைத்தான் நான் பின்பற்றுகிறேன்,” என்று நித்யா மேனன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழில் மாறுபட்ட கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகவும் விரைவில் முன்னணி இயக்குநரின் தமிழ்ப் படத்தில் தாம் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள நித்யா, ஊதிய விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என்ற நற்பெயரைச் சம்பாதித்துள்ளார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தில் நித்யாவுக்கும் ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்