இனி புதிய பாதையில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ஜிகர்தண்டா-2’ படம் விரைவில் திரைகாண உள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில், இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், ‘ஜிகர்தண்டா’ படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘அசால்ட் சேது’ கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் தம்மை தேடி வந்ததாகக் குறிப்பிட்டார்.
“சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. பின்னர் அந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தபோது, நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என வருத்தப்பட்டேன்.
“இருந்தாலும் பரவாயில்லை. அன்று இருபது கோடி ரூபாய் செலவில் உருவான படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததால்தான் இப்போது நூறு கோடி ரூபாய் செலவில் உருவாகும் படம் கிடைத்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா, அண்மையில் சிவகார்த்திகேயன், விஷாலுடன் இணைந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். இப்போது என்னுடன் இணைந்துள்ளார்.
“கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனி பழைய கதைகள் வேலைக்கு ஆகாது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
“இன்றைய தலைமுறை இயக்குநர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை, சண்டைக் காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
“நானும் இந்த புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அது சரியான பாதையா என்பது இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தெரியவரும்,” என்றார் லாரன்ஸ்.

