லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம். இம்மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே சர்ச்சைகளும் கிளம்பின.
அதாவது, ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் பேசிய ஆபாச வார்த்தை மிகப்பெரிய அளவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. மக்கள் மத்தியில் அதிக அளவில் குடும்ப ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் இப்படி ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்தப் படம் பற்றிய செய்திகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளில் சிக்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடிதான்’ பாடலுக்கான அறிவிப்பு சுவரொட்டியில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படம் வெளியானது. மேலும் அந்தப் பாட்டில் ‘பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,’ என்ற வரிகளும் ‘மில்லி உள்ள போனா போதும், கில்லி வெளில வருவான்டா,’ என்ற வரிகளும், ‘பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,’ ஆகிய வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. மேலும், காணொளியில் எந்த ஓர் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெறவில்லை. கண்டனத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டது.
பின்னர் ஜூலை மாதத்தில் படத்தில் நடித்திருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளைச் சிறப்பிக்க அவருக்காகவும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் மற்றொரு நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளைச் சிறப்பிக்க அவருக்காகவும் வெளியான காணொளிகளில் இருவரும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வெளியாயின.
தொடர்ந்து தன் படங்களில் குடி, வன்முறை, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் இயக்குநர் லோகேஷ் அதிக ஆர்வம் காட்டுகிறார் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பினார்கள்.
கடந்த வாரம் இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை திரையரங்கின் வளாகத்தில் திரையிட அனுமதி கேட்டதற்கு காவல் துறை அனுமதி தரவில்லை. அதனால், சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிட்டபோது பல விஜய் ரசிகர்கள் அரங்குக்குள் புகுந்து அங்கிருந்த இருக்கைகளை மொத்தமாக நாசம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ‘லியோ’ படத்திற்கு புதிதாக ஒரு சிக்கலும் முளைத்துள்ளது. ‘லியோ’ படத்தின் ‘நான் ரெடிதான் வரவா’ என்ற பாடல் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டது. இந்தப் பாடலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆடியிருந்த நிலையில் அவர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது
‘லியோ, லியோ’ என பேசிக் கொண்டு ரசிகர்கள் அவர்களது நேரத்தையும் வேலையையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது எழும் எந்த ஒரு சர்ச்சைக்கும் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படுவதில்லை. மேலும் அவர் தனது அடுத்த படமான ‘விஜய் 68’ படத்தில் நடிக்கப்போய் விட்டார் என்கின்றது கோலிவுட்.
இறுதியாக ‘லியோ’ படம் தணிக்கைக்கு சென்றது. இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழு பட்டியலிட்டுள்ளது. படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் ‘பீப்’ ஒலி இடம் பெற வேண்டும். மேலும் கெட்ட வார்த்தைகள் வரும் இடங்களிலும் இதனைப் பின்பற்ற வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டும்.
ரத்தம் தெறிக்கும் சில சண்டை காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நீளத்தை குறைத்தோ, அல்லது தெளிவில்லாமல் செய்தோ மாற்ற வேண்டும் என்பது உள்பட 13 திருத்தங்களை செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதனால் 13 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டு படம் 2 மணிநேரம் 44 நிமிடங்களாக உருவாகி உள்ளது. இந்த பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இக்காலகட்டத்தில் ரசிகர்கள் தாங்கள் தலைவர்களாக நினைக்கும் முன்னணி நடிகர்கள் திரையில் செய்வதை வழிகாட்டுதல்களாக எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றுகிறார்கள். இது தெரிந்தும் பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் குடி, போதை, கெட்ட வார்த்தை, புகைத்தல் என்று தன்னை நம்பும் ரசிகர்களைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தங்களுடைய பாணியில் சென்று கொண்டு இருப்பது மிகவும் கவலையைத் தருகிறது என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

