தமிழ்த் திரையுலகில் அண்மைக்காலமாக வன்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வசூல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களில் பெரும்பாலானவை அடிதடி காட்சிகள், வன்முறையைத் தூண்டும் வசனங்களுடன் உருவாகியவை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ படம் திரைகாணும் முன்பே அதில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஒரு தரப்பினர் சாடுகின்றனர். அப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் விஜய் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. ஆனால் அவை இரண்டுமே வசூலில் அசத்தி உள்ளன.
நடிகர் ராகவா லாரன்ஸ் தாம் புதுப் பாதையைத் தேர்வு செய்துள்ளதாகவும் இனி அதில்தான் தனது திரையுலகப் பயணம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
“வேகமான திரைக்கதையும் அடிதடிக் காட்சிகளும் கொண்ட படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. எனவே, நானும் அத்தகைய படங்களில் நடிக்கப் போகிறேன்,” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.
“முன்பெல்லாம் பெரும்பாலான படங்கள் அனைத்து வயதினரும் கண்டுகளிக்கும் வகையில் இருந்தன. அதனால் தணிக்கைக் குழுவினர் `யு’ சான்றிதழ் அளித்தனர். தற்போது முன்னணி கதாநாயகர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை அனைத்துப் படங்களிலும் வன்முறைகை் காட்சிகள் அதிகம் இடம்பெறும் காரணத்தினால் `யு ஏ’ சான்றிதழ்களைப் பெற்று வருகின்றன,” என்று தினத்தந்தி ஊடகம் வெளியிட்ட அலசல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்ததை இக்கட்டுரை சுட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ் சினிமா வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வசூலில் புரட்சி செய்ததாக விளம்பரப்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் ரத்தம் தெறிக்கும் படங்களாக வெளிவந்தவை தான்.
“ரத்தம் தெறிக்கும் அடிதடிப் படங்களோடு மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்களும் அதிகம் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,” என்று ஊடகக் கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

