ஆஸ்கர் நாயகனை மிஞ்சிய ‘கொலைவெறி’ நாயகன்

ஆஸ்கர் நாயகனை மிஞ்சிய ‘கொலைவெறி’ நாயகன்

2 mins read
b0b0ff60-010a-4ce8-9335-4ae66c5d3094
அனிருத். - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்பொழுது முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய் ஆகியோரும் இவரின் இசை இருந்தால் நன்றாக இருக்கும். அவரை முதலில் படத்தில் ஒப்பந்தம் செய்யுங்கள். பிறகு என்னிடம் வாருங்கள் என்று சொல்லுமளவுக்கு உச்சியில் இருக்கிறார் அனிருத்.

இவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைகின்றன.

90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்ததாக பலர் வியந்தபடி சொன்னது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் 48வது படத்திற்குகூட அனிருத்திடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் நாள் இல்லாததால் அனிருத் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அனிருத்தின் இசையில் கடைசியாக ஜெயிலர், ஜவான் ஆகிய படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி லியோ படம் வெளியாக இருக்கிறது.

மேலும் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்திற்கும் இசையமைக்கிறார். சொல்லப்போனால் மாதத்துக்கு ஒரு படம் அவரது இசையமைப்பில் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்தின் பாடல்களும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம், பிறந்தநாள் விருந்து, கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் அனிருத்தின் அதிரடி பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படியொரு மசாலா பாடல்களுக்கு சொந்தக்காரர் அனிருத்.

அடிதடி பாடல்கள் மட்டுமல்லாமல் அவரின் மெலடி பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘3’ படத்தில் ‘கண்ணழகா’, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் ‘நீயும் நானும்’, ‘மாஸ்டர்’ படத்தில் ‘அந்த கண்ண பார்த்தாக்கா’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ‘மேகம் கருக்காதா’ போன்ற மெலடி பாடல்கள் அனிருத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்துள்ளன எனலாம்.

இந்நிலையில் அனிருத் நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிறந்தநாள் பரிசாக லியோ படத்தை கொடுக்கவும் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 50 முதல் 60 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவர் ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த சம்பளம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளத்தைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கோலிவுட்டின் நவீன இசையமைப்பாளராக அனிருத் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி