தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
`லெட்டர்ஸ் டு மிஸ்டர் கண்ணா’ என்ற இந்தி படத்தில் நடித்து முடித்திருப்பவர், தமிழில் அண்மையில் வெளியீடு கண்ட ‘இறுகப்பற்று’ படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.
“பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், நான் நடித்து முடித்த படத்தின் தலைப்பை சொன்னதுமே அவர்களுக்கு என் முகம் நினைவுக்கு வர வேண்டும்.
“அப்படிப்பட்ட படங்களில்தான் நான் நடிக்க விரும்புகிறேன். இதுவரை அத்தகைய வாய்ப்புகள் தேடி வருகின்றன என்பதே மகிழ்ச்சியான விஷயம்தான்,” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியவர், தற்போது தமிழில் சரளமாகப் பேசுகிறார். தனக்கான கதாபாத்திரங்கள் படத்துக்குப் படம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை திரைப்படக் கலைஞராக என்னிடம் மிகுந்த ஆற்றல் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். எனவே, இந்தத் திறமைக்கு ஏற்றவாறு ரசிகர்களால் அறியப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
“ஷ்ரத்தா என்றால் சவால்களை ஏற்று திறம்படச் செயல்படக் கூடியவர் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் விதைக்க விரும்புகிறேன்.
“ஒழுங்கீனமான போக்கில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். போகிற போக்கில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் விருப்பம் இல்லை,” என்கிறார் ஷரத்தா.
தொடர்புடைய செய்திகள்
‘இறுகப்பற்று’ படம் உட்பட பல்வேறு படைப்புகளில் மனநலம் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக குறிப்பிடுபவர், மனநலம் என்பதை இனி சாதாரண அம்சமாக கருத முடியாது என்கிறார்.
“இல்லற வாழ்க்கையில் மோதல் என்பது இருக்கவே செய்யும். எனினும், அந்த மோதல் அவசியமா, அந்த அளவுக்கு ஒருவரது திருமண வாழ்வு மதிப்புடையதா எனப் பார்க்க வேண்டும்.
“இதையெல்லாம் கச்சிதமாக காட்சிப்படுத்தியதும் உறவுகளுக்கு இடையேயான தொடர்புத்தன்மையை தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதும்தான் ‘இறுகப்பற்று’ படத்தின் வெற்றிக்கு காரணம் எனக் கருதுகிறேன்,” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
படப்பிடிப்பு இல்லாத நாள்களில் சாதாரண பெண்ணாக ரசிகர்களால் அடையாளம் காண முடியாத வகையில் வெளியே நடமாடுவது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
அண்மையில் பெங்களூரு சென்றிருந்தபோது காலை உணவுக்குப் பெயர் பெற்ற சில உணவகங்களுக்கு நேரில் சென்று சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.
“பெங்களூரு போன்ற பரபரப்பான பெருநகர வாழ்க்கைச்சூழலில் யாருக்கும் நம்மை அடையாளம் காண்பதற்கு நேரமோ விருப்பமோ இல்லை. அது எனக்கு வசதியாக உள்ளது.
“கடந்த ஏழு ஆண்டுகளில் ‘விக்ரம் வேதா’, ‘இறுகப்பற்று’, ‘நேர்கொண்ட பார்வை’ (தமிழ்), ‘யூ-டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’, ‘ஜெர்ஸி’ (தெலுங்கு), ‘ரஸ்தம்’ (கன்னடம்), ‘ஆராட்டு’ (மலையாளம்) என ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட படங்களில் நானும் பங்களித்துள்ளேன்.
“எனவே, தரமான படங்களில்தான் நான் நடிப்பேன் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. அதை தக்கவைக்க கடுமையாக உழைப்பேன், என்கிறார் ஷ்ரத்தா.