சிங்கப்பூரில் ஒய் ஜி மகேந்திரன் நாடகங்கள்

சிங்கப்பூரில் ஒய் ஜி மகேந்திரன் நாடகங்கள்

4 mins read
9e5b6b84-57dd-43dd-a800-0ff7a783ff02
திரு ஒய் ஜி மகேந்திரன் - படம்: திரு ஒய் ஜி மகேந்திரன்

நாடகக்கலை என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் இன்றளவும் உலகளவில் உள்ள நாடக ரசிகர்களே அதற்கு ஆதாரம் என்றும் கூறுகிறார் பிரபல திரைப்பட, நாடக நடிகரான திரு ஒய் ஜி மகேந்திரன். 

திரைப்படங்களில் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி சுவாரசியத்தை கூட்ட முடியும். ஆனால் நாடகங்களில் நடிகர்களின் திறமையும் மனதை வருடும் கதையின் கருப்பொருளுமே ரசிகர்களை கட்டிப்போடும் சாத்தியக்கூறுகள் என்றும் இவர் கூறினார். 

யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் (யுஏஏ) (United Amateur Artists(UAA)) எனும் நாடகக் குழுவினை நடத்திவரும் இவர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.

இம்மாதம் 21,22ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் இரு நாடகங்களை படைக்கவிருக்கிறார் திரு மகேந்திரன். தன் நாடகக் குழுவினருடன் இணைந்து ‘இது நியாயமா சார்’ எனும் நகைச்சுவை பின்னணியைக் கொண்ட நாடகத்தை 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், ‘சாருகேசி’ எனும் வலுவான கதையம்சம் கொண்ட நாடகம் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கும் அரங்கேற்றவிருக்கிறார். 

சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலின் பிஜிபி உள்ளரங்கில் நடைபெறவுள்ள இவ்விரு நாடகங்களையும் திரு மகேந்திரன் இயக்கியதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நாடகங்களுக்கான கதைகளை எழுதியவர் திரு வெங்கட்.  

“நல்ல நடிப்பு, சுகாதாரமான நகைச்சுவை, கருத்துமிக்க கதை வசனம் உள்ளிட்ட தரமான நாடகத்திற்கான அனைத்து அம்சங்களையும் இவ்விரு நாடகங்களிலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்” என்று உற்சாகத்துடன் கூறினார் திரு மகேந்திரன். அத்துடன் ‘சாருகேசி’ நாடகம் விரைவில் திரைப்படமாகும் முயற்சியும் நடைபெறுவதாகவும் இவர் குறிப்பிட்டார்.  முந்தைய காலங்களில் அனைத்து வகையான கலைப் படைப்புகளையும் அனைவருமே கண்டு களித்து மகிழ்ந்தனர். தற்போதுள்ள காலத்தில் நாடக விரும்பிகள், திரைப்பட ரசிகர்கள், இணையத்தள தொடரை வரவேற்கும் பொதுமக்கள் என கலை வடிவங்களுக்கான குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி வருவது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் இவர் பகிர்ந்து கொண்டார்.   

பொதுவான நாடக உருவாக்கம் குறித்து பகிர்ந்துகொண்ட இவர், ஒரு நாடகத்தின் கதையை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கதாசிரியருடன் கலந்துரையாடி மெருகேற்றுவதாக சொன்னார். அனைத்து நாடக நடிகர்களுடனும் இணைந்து குறைந்தது 45 நாள்கள் ஒத்திகை பார்க்காமல் இதுவரை எந்தவொரு நாடகத்தையும் அரங்கேற்றியது இல்லை என்றும் தெரிவித்தார். 

நாடகத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயணித்துவரும் இவர், தன்னுடைய 11 வயதில் முதல் முறையாக தன்னுடைய தந்தையும் நாடகக் கலைஞருமான ஒய். ஜி. பார்த்தசாரதி தொடங்கிய யுஏஏ நாடகக்குழுவில் குழந்தை நட்சத்திரமாக ‘பெற்றால் தான் பிள்ளையா?’ நாடகத்தின் மூலம் கலைத்துறையில் அடியெடுத்துவைத்தார் திரு மகேந்திரன். 

தொடர்புடைய செய்திகள்

அதன்பின் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய இவர் நாடகத்துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். 

தற்போது 73 வயதாகும் இவர், இந்த கலைப் பயணத்தில் தனக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணமே தோன்றியதில்லை என்றும் ரசிகர்களின் அன்பும் கைத்தட்டலுமே தன்னை வழிநடத்திச் செல்வதாகவும் தெரிவித்தார். 

இன்றைய முன்னனி நடிகர்கள், இயக்குநர்களுடனும் இணைந்து பயணிக்கும் இவர் மாநாடு, மார்க் ஆண்டனி, சந்திரமுகி 2ஆம் பாகம் போன்ற பல்வேறு அண்மையகால படங்களிலும் நடித்து ரசிர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். 

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப கதை சொல்லும் பாணி ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு தக்கவாறு தன்னை மெருகேற்றிக்கொள்வதே இத்தனை காலம் கலைத்துறையில் துடிப்புடன் பயணிக்க வைக்கிறது என்றும் இவர் பகிர்ந்து கொண்டார். 

உலகளவில் திரைத்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் நாம் இருப்பது பெருமையளிக்கிறது. அதே சமயம்  சமீபமாக வன்முறை சார்ந்த படைப்புகள் அதிகம் வெளிவருவதும் அவற்றிக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பும் சற்றே பதற்றமளிக்கிறது என்றும் கூறினார். 

“தற்போது வளர்ந்துவரும் திரைப்படக் கலைஞர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார்கள். இருப்பினும் அவர்களுடைய படைப்புகளை இளைய தலைமுறையினர் பார்த்து வளர்கிறார்கள் என்ற கூடுதல் பொறுப்புணர்வுடன் அவர்கள் செயல்பட வேண்டும்” என்றும் இவர் கேட்டுக் கொண்டார். 

கதாபாத்திரங்களில் நல்லவை தீயவை என்ற பாகுபாடில்லை என்றும் நடிகரின் திறமையை பொறுத்தே அந்த கதாபாத்திரத்தின் வலு சேர்க்கிறது என்றும் தன்னுடைய குருநாதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறிய அறிவுரையை மனதில் வைத்தே இன்றளவும் நடித்து வருவதாகவும் இவர் பகிர்ந்து கொண்டார். 

தற்சமயம் பெயரிடப்படாத சில படங்களில் இவர் நடித்து வருகிறார். இவர் நடித்த சில இணையத் தொடர்களும் விரைவில் வெளிவரும் என்ற தகவலையும் இவர் பகிர்ந்து கொண்டார். 

நாடகக்கலைஞர், திரைப்பட நடிகர், நகைச்சுவை கலைஞர், எழுத்தாளர், பாடகர் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை கொண்ட இவர் ‘கலைமாமணி விருது’, ‘கலைவாணர் விருது’, ‘சங்கீத் நாடக் அகாடெமி விருது’ (Sangeet Natak Akademi Award), ‘டாக்டர் சிவாஜி கணேசன் மெமோரியல் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தன்னுடைய குழுவுடன் சிங்கப்பூரில் அரங்கேற்றவிருக்கும் இரு நாடகங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை https://sg.bookmyshow.com/  இணையத்தளத்தில் வாங்கலாம். ‘சியோன் ப்ரோ பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும்(Seyon Pro Pte Ltd) ‘கேஎஸ் டாக்கீஸ்’ நிறுவனமும்(KS Talkies) இணைந்து இந்த நாடகங்களை ஏற்பாடு செய்துள்ளன.

குறிப்புச் சொற்கள்