‘கட்டில்’ திரைப்படம், மிகத் தரமான படைப்பு

2 mins read
b67cff8f-782e-462e-a8d7-7af3cb7c1033
சிருஷ்டி டாங்கே. - படம்: ஊடகம்

நடிகரும் இயக்குநருமான கணேஷ்பாபு இயக்கியுள்ள படம் ‘கட்டில்’. எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கணேஷ்பாபு நாயகனாகவும் சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் மூத்த படத்தொகுப்பாளரான பி.லெனின் கதை, திரைக்கதை எழுதிப் படத்தொகுப்பும் செய்துள்ளார்.

“கடந்த பத்து ஆண்டுகளாக திரைப்படங்களில் பணியாற்றுவதிலிருந்து விலகியிருந்தார் லெனின். அவருடைய தந்தை இயக்குநர் பீம்சிங் தமிழ் சினிமாவில் பொற்காலத்தைப் படைத்த இயக்குநர்களின் முதன்மையானவர்.

“ஆனால், அப்பாவின் புகழைச் சிறிதுகூடப் பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னுடைய படைப்பாற்றலை மட்டுமே வைத்து தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் லெனின். அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி,” என்கிறார் கணேஷ்பாபு.

இந்தப் படத்தில் கணேஷ் பாபுவின் சகோதரனாக விதார்த்தும் அம்மாவாக கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசமும் நடித்துள்ளனர்.

மேலும், கனிகா சினேகன், சம்பத் ராம், இந்திரா சௌந்தர்ராஜன், செம்மலர் அன்னம், ஓவியர் ஷ்யாம் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

தலைப்பை மட்டும் வைத்து இது ‘அந்த’ மாதிரியான படம் என்று நினைத்துவிட வேண்டாம் என்கிறார் சிருஷ்டி டாங்கே.

“முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிலுக்கும் குடும்ப அமைப்புக்கும் நிறைய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டவே இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.

“ஒவ்வொருவரது குடும்பத்திலும் உறவுமுறைகள் வெவ் வேறாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு இடையில் இருக்கும் பாசப்போராட்டம் ஒன்றுதான். அது தான் இந்தப் படம்,” என்கிறார் சிருஷ்டி.

முழுநீள குடும்பப் படமாக உருவாகியுள்ள ‘கட்டில்’ படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று குறிப்பிடுபவர், திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போதுதான் குடும்பத்தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார்.

இதுவரை தாம் நடித்துள்ள அனைத்து படங்களிலும் எந்தவிதமான விமர்சனத்துக்கும் இடமளிக்காத வகையில் நல்ல நடிப்பை வழங்கி உள்ளதாகவும் தனது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அமையாதது வருத்தம் அளிப்பதாகவும் சிருஷ்டி டாங்கே கூறுகிறார்.

இது போன்ற தரமான படைப்புகளில் நடிக்கும்போது முழு மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுவதாக குறிப்பிடுபவர், இனி நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று உறுதியாக நம்ப முடிகிறது என்கிறார்.

இப்படம் திரைகாணத் தயாராக இருந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க விரும்பினராம்.

சென்னையில் உள்ள வீட்டை அவர்கள் விற்க முடிவு செய்திருந்த நேரமது.

“படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் அனைவரும் கண்கலங்கிவிட்டனர். வீட்டை விற்பதில்லை என்ற முடிவுக்கும் வந்தனர். அதற்கு என்ன காரணம் என்பது படத்தைப் பார்க்கும்போது புரியும்,” என்கிறார் இயக்குநர் கணேஷ் பாபு.

குறிப்புச் சொற்கள்