மகிமா: வில்லியாக நடிப்பது பிடித்திருந்தது

மகிமா: வில்லியாக நடிப்பது பிடித்திருந்தது

2 mins read
ff541d55-a088-4060-a63e-9715af008cee
மகிமா. - படம்: ஊடகம்

முதல் முறையாக ‘ரத்தம்’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மகிமா நம்பியார்.

மலையாளத்தில் `ஆர்.டி.எக்ஸ்’, தமிழில் முத்தையா முரளிதரனின் பயோபிக்கான `800’, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக `சந்திரமுகி-2’ என கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென வில்லியாக நடித்தது ஏன் என்று கேட்டால், ‘இந்த மாறுபட்ட முயற்சி உற்சாகம் அளித்தது’ என்பதே மகிமாவின் பதிலாக உள்ளது.

“`தமிழ்ப்படம்’ என்ற படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் உருவாகும் படம் என்றதும் நகைச்சுவையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

“ஆனால், அவர் முழுக் கதையையும் விவரித்த பிறகு வியப்பாக இருந்தது. முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை விவரித்தார் அமுதன்.

“அதிலும், நான்தான் இப்படத்தில் வில்லி என்று அறிந்தபோது உற்சாகமாக இருந்தது. இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலும் முதிர்ச்சியற்ற, குறும்பான பெண்ணாகவே நடித்துள்ளேன். சில பாடல் காட்சிகளில் வந்துபோவேன். அந்த வழக்கத்தை இந்தப் படத்தில் மாற்றி அமைத்துள்ளார் இயக்குநர் அமுதன்,” என்கிறார் மகிமா.

`ரத்தம்’ படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பது பிடித்துள்ளதாகவும் தொடர்ந்து இதுபோன்ற வேடங்களில் நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

தன்னைப் போன்று வளர்ந்து வரும் நாயகிகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது பெரிய விஷயம் என்றும் விஜய் ஆண்டனி போன்ற முன்னணி நடிகரின் படத்தில் இவ்வாறு நடிப்பது பெரிய வாய்ப்பு என்றும் கூறுகிறார் மகிமா.

“இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே திரையுலகப் பயணம் நீண்ட நாள் நீடிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘சந்திரமுகி-2’ படத்தில் கங்கனாவின் நடிப்பை வெகுவாக ரசித்தாராம்.

“எந்த காட்சியிலும் கங்கனாவுடன் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், அவர் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவரைப் போன்ற அனுபவ நடிகையின் சிறப்பான நடிப்பை அருகில் இருந்து பார்க்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்பேன்.

“இயக்குநர் சொல்வதை உடனடியாக உள்வாங்கி, வசனங்களைப் புரிந்துகொண்டு அவர் நடித்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது,” என்று சொல்லும் மகிமா, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடித்துள்ளார்.

அதில் முரளிதரனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவமாக இருந்தது என்கிறார்.

“பொதுவாக நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான ஒப்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் இருக்காது. ஆனால், முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் ஒப்பனையில் மிகுந்த கவனம் செலுத்த நேரிட்டது.

“நாள்தோறும் ஒப்பனைக்காக வழக்கத்தைவிட கூடுதலாக ஒன்றிரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திலும் ரசித்து நடித்தேன்,” என்கிறார் மகிமா.

குறிப்புச் சொற்கள்