ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பலரது முயற்சியும் முதலீடும் இருக்கும் என்பதால் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிறார் கியாரா அத்வானி.
இவர் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளாகிவிட்டன.
அண்மைய பேட்டி ஒன்றில் தாம் கதைகளைத் தேர்வு செய்யும் விதம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் கியாரா.
“எனக்கேற்ற கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலர் உருவாக்குகிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்காக நான் கேட்கும் அனைத்து கதைகளிலும் நடித்துவிட இயலாது.
“திரையுலகில் வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். எனவே ஒரு கதையைக் கேட்கும்போது அது உணர்வுப்பூர்வமானதா இல்லையா என்பதை கணித்துவிட வேண்டும். அந்தத் திறமை இருந்தால்தான் திரையுலகில் நீடிக்க இயலும். இல்லையெனில் ஒதுக்கிவிடுவார்கள்,” என்கிறார் கியாரா அத்வானி.
இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

