ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வந்த ரகுமான், தமிழிலும் மலையாளத்திலும் நல்ல கதாபாத்திரங்களாகத் தெரிவு செய்து நடித்து வருகிறார்.
தற்போது இந்திப் படங்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
அவர் நடித்துள்ள ‘கண்பத்’ இந்திப் படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் படத்தின் இயக்குநர் விகாஸ் பால் நல்ல நண்பர். அவர் ‘கண்பத்’ கதையை என்னிடம் விவரித்த அடுத்த நிமிடமே இது நல்ல வாய்ப்பு எனத் தோன்றியது.
“படத்தின் நாயகன் டைகர் ஷெராஃபுக்கு அடுத்தபடியாக எனது பாத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனக்கான காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் முதல் காட்சியே என்னை வைத்துதான் தொடங்கும்.
“அது மட்டுமல்ல, அமிதாப் பச்சனும் நடிக்கிறார் என்று தெரிந்த பிறகு மறுபேச்சு இன்றி தேதி ஒதுக்கிவிட்டேன். கதைப்படி அமிதாப் எனது தந்தை. அவர் என்னைக் கட்டியணைத்து வசனம் பேசிய காட்சிகளை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது,” என்று ரகுமான் தெரிவித்துள்ளார்.
இந்திப் படங்களில் நடிக்க தமக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்றும் கடந்த முப்பது ஆண்டுகளில் பல இந்திப்பட வாய்ப்புகள் கைநழுவிப் போயின என்றும் அவர் கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு பாலச்சந்தர் இயக்கத்தில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்தேன். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தியில் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏதாவது ஒரு படத்துக்குதான் கால்ஷீட் ஒதுக்க முடியும் என்ற நிலை. அப்போது பாலச்சந்தர் படத்தைத் தேர்வு செய்தேன். இப்படித்தான் பல படங்களில் நடிக்க இயலாமல் போனது,” என்கிறார் ரகுமான்.
தொடர்புடைய செய்திகள்
இடையில், சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர் ரகுமான் இசையமைத்தால் இணைந்து பணியாற்றலாம் என்ற கோரிக்கையுடன் இவரை அணுகியுள்ளனர். ஆனால், எடுத்த எடுப்பிலேயே இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
“நானும் ஏ.ஆர்.ரகுமானும் நெருங்கிய உறவினர்கள்தான். எனினும் சொந்தம் வேறு, தொழில் வேறு என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். இரண்டையும் இணைக்க நான் விரும்பவில்லை.
“இன்றைய தேதியில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது. அதற்கேற்ப என்னை நானே மாற்றிக்கொள்கிறேன். காலத்துக்கு ஏற்ப கதை கேட்பதில் தொடங்கி, நடிப்பு வரை மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளேன். அலட்டிக் கொள்வது மாதிரியான படங்களை நான் விரும்புவதில்லை.
“ஓடிடி வந்த பிறகு உலகப் படங்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எனவே நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கிண்டல் செய்வதற்குச் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் காத்துக் கிடக்கிறார்கள்.
“என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படமும் சிறப்பாக உருவாக என்னால் இயன்றதைச் செய்கிறேன்,” என்கிறார் ரகுமான்.
‘சூப்பர் நாயகன்’ கதையில் நடிக்க வேண்டும், அதிரடி வசனங்களைப் பேச வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பதாகவும் சொல்கிறார் அனுபவ நடிகர் ரகுமான்.
“கதாநாயகர்கள் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது புதிதல்ல. அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் வில்லனாக நடித்ததற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

