‘சூரரைப்போற்று’ இயக்கிய சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார் .
சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷின் 100வது படமாகும். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.
சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும்.
இப்படம் பற்றிய அறிவிப்பை ஒரு சிறு காணொளி மூலம் படக்குழு வெளியிட்டது.
காணொளியில் ‘புறநானுறு’ என குறிப்பிட்டு மேலே இரண்டு தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தன.
மேலும் காணொளியில் மாணவர்கள் போராட்டம், துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. அதனால் இது ஒரு அரசியல் கலந்த படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசிவருகின்றனர்.
சுதாவின் ‘சூரரைப்போற்று’ சூர்யாவுக்கு இந்திய அளவில் புகழை தந்தது, கூடுதலாக அப்படம் தேசிய விருதுகளையும் வென்று பலரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
துலகர் சல்மான் சூர்யாவுடன் கூட்டணி சேர்வதும் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அவரின் அண்மையில் நடித்த ஹீரியே இந்தி பாடல், இந்தியா முழுவதும் பிரபலமானது.
மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி நடிகராகவும் துல்கர் சல்மான் தம்மை மாற்றிக்கொண்டதால் அவரின் பங்கு இப்படத்தில் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் 234வது படத்திலும் நடிக்க துல்கர் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர்தான் நஸ்ரியா என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.
தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா கங்குவா திரைப்பட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்பட்டத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார்.
இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நடராஜ் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் நடந்தன.
கங்குவாவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் எடுக்கப்பட்டது. மேலும், நடிகர் சூர்யாவின் காட்சிகள் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
படம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதையுடன் உருவாகும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
வரலாற்றுப் பின்னணி, கம்பீரமான தோற்றம் ஆகிய அம்சங்கள் சூர்யாவை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சூர்யா கங்குவா திரைப்பட வேலைகளை முடித்த பிறகே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

