எக்காரணத்தைக் கொண்டும் எந்த வகையிலும் விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்கிறார் நடிகை வேதிகா.
இந்த உலகத்தில் உடனடியாக எத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கேட்டால், விலங்குகளிடம் அனை வரும் அன்பு காட்ட வேண்டும் என்பதே தாம் விரும்பும் மாற்றம் என்கிறார்.
அது சாத்தியமாகும் பட்சத்தில் உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம் என அனைத்தும் தன்னால் தழைத்தோங்கும் என்பதுதான் வேதிகாவின் விளக்கம்.
‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’, ‘காஞ்சனா ‘ உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வேதிகா.
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தவர், மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
“ஒரே சமயத்தில் மூன்று தமிழ்ப் படங்களில் நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. பிரபுதேவா வுடன் ‘பேட்டா ராப்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இதில் இடம்பெற்றுள்ள நடனங்கள் அசத்தலாக இருக்கும். மேலும், ‘மஹால்’ என்ற படத்திலும், தமிழ்-தெலுங்கில் ரெடியாகும் ‘ஜங்கிள்’ படத்திலும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ‘ரசாகர்’ என்ற படத்திலும் நடிக்கிறேன்.
“கன்னடத்தில் ‘கனா’ என்ற தலைப்பிலும் இரண்டு மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறேன்,” என்று பட்டியலிடும் வேதிகாவுக்கு இணையத் தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
வழக்கமான பாத்திரங்களில் இருந்து விலகி நின்று, மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புவதாக தினத்தந்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள இவர், வில்லியாகவும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிக்க முன்னுரிமை அளிக்கத் தயார் என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்மறை வேடங்களில் நடிப்பது எளிதல்ல. நம்மிடம் இயல்பாகவே உள்ள இரக்கம், பாசம், அன்பு உள்ளிட்ட குணாதிசயங்களை மறந்துவிட்டு, எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
“நிஜ வாழ்க்கையில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் திரையில் அதற்கு நேர்மாறாக மற்றவர் களைத் துன்புறுத்துவதுபோல் நடிப்பது கடினம். எனினும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளத் தயார்,” என்று சொல்லும் வேதிகாவுக்கு இயற்கையை ரசிப்பதுதான் முக்கியப் பொழுதுபோக்காம்.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை ரசித்தபடியே பயணம் மேற்கொள்வதற்கு அதிக நேரம் ஒதுக்குவாராம். மாலத்தீவு, இத்தாலி ஆகியவைதான் இவரது மனம் கவர்ந்த நாடுகள். ஐரோப்பாவில் உள்ள சில பகுதிகளும் ரொம்பப் பிடிக்குமாம்.
மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் விதைக்கக்கூடிய பாத்திரங்களில் நடிக்கும் ஆசை ஒருபுறம் இருக்க, முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வேதிகாவுக்கு உள்ளது.
“ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி மாதிரி பெரிய நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன். எனினும் இத்தகைய வாய்ப்புகளைப் பெற ஊதியத்தைக் குறைப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. சம்பாதிப்பதற்காகத்தானே நடிக்கிறோம்.
“தமிழில் சரளமாகப் பேச முடியும். இதற்காக சிறப்புப் பயிற்சி எல்லாம் பெறவில்லை. படப்பிடிப்பின்போது சுற்றி இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பேன். அப்படிக் கற்றுக்கொண்டது இப்போது வசதியாக உள்ளது,” என்று சொல்லும் வேதிகா, தற்போது தமிழில் ‘ஜங்கிள்’ என்ற திகில் படத்தில் நடிக்கிறார்.
இது, ‘முனி’, ‘காஞ்சனா-3’ படத்துக்கு இணையாக ரசிகர்களை மிரள வைக்குமாம்.
ஓடிடி தளங்களால் திரையுலகம் மேலும் வளர்ச்சி காணும்் என்றும் புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.
“காதல், திருமணம் குறித்தெல்லாம் இப்போது ஏதும் பேசமாட்டேன். என் தாயார் ஆஷாவைத்தான் எனது முன் மாதிரி என்பேன். எப்போதுமே உற்சாகமாகவும் நம்பிக்கை இழக்காமலும் செயல்படுவார். இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து வருவதற்கு பல்வேறு தருணங்களில் அவர் வழிகாட்டி உள்ளார்.
“என் மனதில் இடம்பிடிக்க நினைக்கும் ரசிகர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்றைச் சொல்கிறேன். பிறர்க்கு உதவுங்கள். அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள். இரக்க உணர் வுடன் செயல்படுங்கள். இத்தகைய போக்குதான் எனக்குப் பிடிக்கும். இந்த நல்ல குணங்கள் உள்ளவர்களுக்கு என் மனதில் எப்போதுமே இடமுண்டு. அவர்களுக்காக என் இதயம் காத்திருக்கும்,” என்கிறார் வேதிகா.

