இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்ரன் இனி திரைப்படங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’ என்ற மூளை சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்புக்கு தாம் ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.
‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அல்ஃபோன்ஸ் புத்ரன்.
தமிழில் வெளியான ‘நேரம்’ படமும் இவருக்கு ஓரளவு பெயர் வாங்கிக் கொடுத்தது. இரண்டு வெற்றிக்குப் பிறகு ‘கோல்டு’ படம் தோல்வியைக் கொடுத்தது. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர்.
இதையடுத்து நடனப் பயிற்சியாளர் சாண்டியை வைத்து ‘கிஃப்ட்’ என்ற தலைப்பில் தனது நான்காவது படத்தை இயக்கி வருகிறார் அல்ஃபோன்ஸ் புத்ரன்.
இந்நிலையில் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இனி திரையரங்குகளுக்கான படங்களை இயக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’ குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
“எனினும் தனியிசைத் தொகுப்புகள், குறும்படங்கள், ஓடிடி தளங்களுக்கே ஏற்ற படைப்புகளில் கவனம் செஎலுத்துவேன். நிச்சயமாக சினிமாவை விட்டு விலக மாட்டேன். ஏனென்றால் அதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.
தொடர்புடைய செய்திகள்
“மோசமான உடல்நிலையும் எதிர்பார்க்க முடியாத வாழ்க்கையும் அமைந்தால் இப்படித்தான் ‘இடைவேளை அதிரடி’ (இண்டர்வெல் பஞ்ச்) போல் திடீர் திருப்பம் இருக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.
இந்தப் பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் அல்போன்ஸ் புத்திரன் நீக்கிவிட்டார். அதற்குள் ரசிகர்கள் இதைப் பரவலாகப் பகிர்ந்துவிட்டனர்.
அவரது வேதனையும் சோகமும் ததும்பும் இந்தப் பதிவு ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் கலங்க வைத்துள்ளது.

