திரையுலகில் சாதிக்க திறமை மட்டும் போதாது என்றும் நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும் என்றும் சொல்கிறார் கௌரி கிஷன்.
ஒரு பெண்ணாக திரைத்துறையில் சாதிப்பது கடினம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கௌரி நடிப்பில் தமிழில் அடியே, மலையாளத்தில் மிஸ்.ராவுத்தர் ஆகிய இரு படங்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
“என் பெயரைச் சொன்னதுமே ‘96’ படத்தில் நான் ஏற்று நடித்த ஜானு கதாபாத்திரம்தான் ரசிகர்களின் நினைவுக்கு வருகிறது. ஆனால் நான் ஜானுவுக்கும் மேலானவள் என்பது ரசிகர்களுக்கு விரைவில் புரிய வரும்.
“இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களில் எவையெல்லாம் சவாலாக இருந்தன என்று சிலர் கேட்கிறார்கள். முக்கியத்துவம் உள்ள அனைத்து வேடங்களுமே சவாலானவைதான்.
“அடியே’ படத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்வது போன்ற காட்சி அமைப்பு இருந்தது. ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி நடிப்பது சவாலாக இருந்தது. முழு அர்ப்பணிப்புடன் நடித்தேன்.
“இதேபோல் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற பொய்லாள் பாத்திரத்துக்கு இந்த உலகமே புதிதாக இருக்கும். அவளுக்கு அறிமுகமற்ற ஓர் உலகம், குறிப்பிட்ட சமுதாயம் குறித்துப் பேச வேண்டியிருந்தது. இதற்காக பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது.
“அந்தப் பாத்திரத்துக்காக கிராமத்துப் பெண்ணின் உடைகளை அணிந்து தோற்றத்தையும் மாற்றிக்கொண்டது சவாலான அனுபவம். ஏனெனில் நான் நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண். கிராம வாழ்க்கை பற்றி அறவே விவரம் தெரியாது. கிராமத்துப் பெண்ணுக்குரிய உடல்மொழியும் தெரியாத நிலையில், நிறைய கவனம் செலுத்தினேன்,” என்று கௌரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், படப்பிடிப்பின்போது உடலை வருத்தி நடிக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில காட்சிகள் மன ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஒரு பெண் என்ற வகையில் திரையுலகில் சாதிக்க நினைப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் கௌரி கருதுகிறார்.
“எனினும் தற்போது திரையுலகில் பல்வேறு வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் முற்போக்குடன் சிந்திக்கிறார்கள். அதனால் பெண்களுக்கான நெருக்கடிகள், சி்க்கல்கள் குறைந்திருப்பதாகக் கருதுகிறேன். இப்போதும்கூட திரைத்துறையில் பெண்கள் சாதிப்பது கடினமாகத்தான் உள்ளது. எனினும் காலப்போக்கில் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
“திரையுலகம் பெண்களுக்கு ஏற்ற துறையாக மாறி வருகிறது. சில நடைமுறைகள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மாற்றம் கண்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை, எந்தத் துறையாக இருந்தாலும் திறமை மட்டுமே நாம் சாதிக்கப் போதுமானதல்ல. நமக்கான வாய்ப்புகளும் உரிய நேரத்தில் அமைய வேண்டும்.
“அண்மைய திரைப்படங்களில் நடிகைகளுக்கான காட்சிகள் அதிகரித்துள்ளன. சென்னையின் பரபரப்பான பகுதியில் இயங்கி வரும் மூன்று திரையரங்குகளில் ஒரே சமயத்தில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று கதாநாயகிகளின் படங்கள் திரையிடப்பட்டன. இது பெண்களின் வளர்ச்சிக்கான ஆகச்சிறந்த அறிகுறி என்பேன்,” என்கிறார் கௌரி கிஷன்.

