ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா அறிவுரை

ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா அறிவுரை

2 mins read
3685be5b-f8c4-461d-a262-81bb8f82106b
ராஷ்மிகா மந்தனா - படம்: ஊடகம்.
multi-img1 of 2

சுற்றுப்பயணம் செய்யுங்கள், உறவையும் உலகையும் ரசியுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுகிறார் ராஷ்மிகா மந்தனா.

இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறி தென்னிந்தியாவில் முன்னணி நடிகையானார்.

பான் இந்தியா அளவில் வெளியாகிய ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீவல்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ராஷ்மிகா மந்தனா.

இந்தப் படத்தின் பாடல்களில் ராஷ்மிகாவின் நடனம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. ‘புஷ்பா 2 - தி ரூல்’ திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் காரணமாக இந்தியிலும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது ராஷ்மிகா இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்தத் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அவர் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர், தமிழில் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தத் தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தில் என்னுடைய தோற்றம் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளார் என்று வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்களும் உங்கள் சொந்த ஊருக்கு அல்லது நண்பர்கள் வீட்டுக்கு அல்லது உங்கள் கனவு இடத்திற்கு குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ சென்று வாருங்கள். இதுபோல் பயணம் செய்தால்தான் உங்கள் மனம் ஒரு நிலையை பெறும்.

“வித்தியாசமான உணவு முறைகள், கலாசாரம், வாழ்க்கை முறை அனைத்தும் அற்புதமாக இருக்கும். அதனால் எல்லோரும் பயணம் செய்யுங்கள்,” என்று கூறியிருக்கிறார்.

சினிமாபோல் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் ராஷ்மிகா. தனது அழகாலும் அசத்தலான நடிப்பாலும் காண்போரை கவர்ந்து இழுக்கும் ராஷ்மிகா பல இடங்களுக்கு பயணம் சென்று படம் பிடித்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி