தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்: பெரிதாக கனவு காண வேண்டும் நண்பா

3 mins read
87242572-754e-41dd-9cc3-c744d54cf204
லியோ வெற்றிவிழாவில் மேடையில் தோன்றிய விஜய். - படம்: ஊடகம்.

நடிகர் விஜய் ‘லியோ’ பட வெற்றிவிழாவில் குட்டிக் கதைச் சொல்லி தான் அரசியலுக்கு வருவதைப்பற்றி மறைமுகமாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் ‘லியோ’. இந்தப் படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு வெற்றிவிழாவை மிகவும் சிறப்பாக நேரு ஸ்டேடியத்தில் கொண்டாடியது.

வெற்றி விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்ததோடு, அவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அந்த வெற்றிவிழாவில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ‘லியோ’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் வழக்கம்போல என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து பாட்டுப் பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.

அதன்படி, “ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகு என்று நிறைய விலங்குகள் இருந்தன. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்குச் சென்றார்கள். ஒருத்தர் வில் அம்புடன் சென்று முயல் ஒன்றைப் பிடித்து வந்தார். மற்றொருவர் ஈட்டியோடு போய் யானைக்கு குறி வைத்து யானைக் கிடைக்காமல் திரும்பி வந்தார்.

“இதில் யார் வெற்றியாளர்? நிச்சயமாக யானைக்கு குறி வைத்தவர்தான் வெற்றியாளர். எப்போதும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணவேண்டும்.

நம்மால் எதை ஜெயிக்க முடியுமோ அதைச் செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஓர் இடம் இருக்கும். பெரிதாக கனவு காணணும் நண்பா,” என்று குட்டி ஸ்டோரியை முடித்துக் கொண்டார்.

மேலும், “உங்களுக்காக என் தோலைச் செருப்பாக தைத்தால்கூட உங்களின் அன்புக்கு ஈடு ஆகாது. என்றைக்கும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அதற்கு நம் பசங்கதான் காரணமாக இருக்கவேண்டும்,” என்று தெரிவித்தார்.

‘லியோ’ இசை வெளியீட்டில் தவறவிட்ட நடிகர் விஜய்யின் பேச்சு ‘லியோ’ வெற்றிவிழாவில் சிம்ம கர்ஜனையாகவே ஒலித்தது. அனைத்து விஷயங்களையும் அழகாகவும் தெளிவாகவும் எந்தவொரு சர்ச்சையையும் கிளப்பாத வகையிலும் பேசிய நடிகர் விஜய் இறுதியில் அந்த பட்டம் தொடர்பான பஞ்சாயத்துக்கும் முடிவு கட்டினார்.

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய பிரச்சினைக்கு ஒருவழியாக நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“சூப்பர்ஸ்டார்’ என்றால் ஒருத்தர்தான். ‘மக்கள் திலகம்’ என்றால் ஒருத்தர்தான். ‘நடிகர் திலகம்’ என்றால் ஒருத்தர்தான். ‘உலக நாயகன்’ என்றால் ஒருத்தர்தான். ‘புரட்சிக் கலைஞர்’ என்றால் ஒருத்தர்தான். ‘தல’ என்றால் ஒருத்தர்தான். நீங்கள்தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் ‘தளபதி’. நீங்கள் ஆணையிடுங்கள், நான் செய்கிறேன்.

“நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்,” என்று தனது அரசியல் நிலைப்பாட்டையும் அதிரடியாக அறிவித்துள்ளார் தளபதி விஜய்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி