‘தங்க மகனின் எழுச்சி’

2 mins read
45976b3b-8cf4-4a26-b701-f13832deb8c9
விக்ரம். - படம்: ஊடகம்.
விக்ரம்.
விக்ரம். - படம்: ஊடகம்.

கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியுள்ளது ‘தங்கலான்’ படம்.

‘பொன்னியின் செல்வன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார்.

படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 1:32 நிமிடங்கள் ஓடும் இந்த முன்னோட்டக் காட்சியில் வசனங்களே இல்லை. முழுவதும் வரலாற்றுப் பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது.

சண்டைக்காட்சிகள், கைகளாலேயே பாம்பை விக்ரம் இரண்டாகப் பிய்த்து எறியும் காட்சி, விக்ரமின் உடலில் சாரல் போன்று பீறிட்டு அடிக்கும் ரத்தம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இறுதியில் தரை முழுவதும் படர்ந்து இருக்கும் தங்கம், படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னோட்டக் காட்சியில் தங்கத்தை பின்னணியாக வைத்து நடக்கும் கதைக்களத்தை பிரதிபலிப்பதால் கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

படம் பற்றி விக்ரம் கூறுகையில், “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாடவேண்டும். கெட்ட விஷயங்களை மறக்கக்கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

“கேஜிஎஃப்பில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் மிகவும் வெப்பமாகவும் இரவில் தாங்க முடியாத குளிரும் இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது.

“எங்கு பார்த்தாலும், பாம்பு, தேள்கள் உலாவும் இடம் அது. அப்படியான இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்தோம்.

“ஒப்பனைக்கு மட்டும் நான்கு மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.

“முதன்முறையாக நான் நடிக்கும்போதே குரல் பதிவும் செய்து நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான ஏற்ற இறக்கம், அந்த காலத்தின் பேச்சு வழக்கு தொடங்கி எல்லாவற்றையும் கவனித்து நடிக்க வேண்டும்.

“புகைப்படக் கருவிகள் சுற்றிக்கொண்டேயிருக்கும். ஒரு தடவைத் தவறினால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். படம் பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலைத் தெரியும்,” என்றார் கலையை நேசிக்கும் சியான் விக்ரம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி