ஷாருக்கானின் பிறந்தநாளை சிறப்பித்த ரசிகர்கள்

1 mins read
d5c1ee6b-4d63-43d1-91ce-fbeb8f8e79d8
டங்கி படத்தில் ஷாருக்கான். - படம்: ஊடகம்

‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். அவர் நேற்று முன்தினம் தன்னுடைய 58வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு ‘டங்கி’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் பல ஆண்டுகளுக்கு பின் சாதாரண மனிதனாக ஷாருக்கான் நடித்துள்ளார்.

இதையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிக்க நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். வாசல் கதவின்மீது ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவுடன் கண்கலங்கினார் ஷாருக்கான்.

இதுகுறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் “இரவு நேரத்தில் ரசிகர்கள் என் வீட்டிற்கு வந்து வாழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. நான் ஒரு சாதாரண நடிகன்தான். உங்களை மகிழ்விப்பதைவிட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. உங்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு கொடுக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி,” என்றார்.

ஷாருக்கானின் திரை வாழ்க்கையில் இந்த ஆண்டை மறக்கவே முடியாது எனலாம். ஷாருக்கானின் நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை ‘பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த ‘பதான்’ படம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகி ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து வெளியான ‘ஜவான்’ படமும் ரூ.1146 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்