தாய் குடியிருந்த கோவிலை விலைக்கு வாங்கும் யோகிபாபு

3 mins read
e295f9b0-d8e7-43b0-a1cc-77d05dcfa896
‘குய்கோ’ படத்தில் யோகி பாபு, துர்கா. - படம்: ஊடகம்

அருள் செழியன் இயக்கத்தில் உருவாகிறது ‘குய்கோ’ திரைப் படம். யோகி பாபு, விதார்த் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருள் செழியனுக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட பல படங்களின் கதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஊடகத்துறையில் இருந்து திரை உலகிற்கு வந்து சாதித்தவர் களின் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு.

‘குய்கோ’ கதையை இவருக்கு முன்பே ‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டன் இயக்குவதாக இருந்ததாம். சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. இப்பொழுது அந்த கதை திரைப்படமாவதற்கும் மணிகண்டன் தான் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளார்.

காலையில் வெளியாகும் நாளேடு மாலையிலும், மாலையில் வெளியாகும் நாளிதழ் காலையிலும் வந்து சேரும் அளவிற்கு நகரத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம், அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்று ஒட்டகம் மேயத்துக்கொண்டு இருக்கிறார் யோகி பாபு.

திடீரென அவரது தாயார் இறந்து போக இறுதிச்சடங்கிற்காக அங்கிருந்து திரும்பி வருகிறார். அதுவரை அவரது தாயின் உடலை குளிர் பெட்டிக்குள் (Freezer box) வைத்து பாதுகாக்கிறார்கள். எனினும் இரண்டு நாள்களுக்கு பிறகுதான் யோகி பாபுவால் சொந்த ஊருக்கு வந்து சேர முடிகிறது. பெற்ற தாயை கடைசி நேரத்தில் பார்க்க முடியாத சோகத்திற்கு ஆட்படுவார்.

அந்தக் குளிர்பெட்டியை விலைக்கு வாங்கி தன் தாயின் நினைவாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில், அந்த பெட்டி திடீரென காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.

“யோகி பாபுக்கும் விதார்த்துக்கும் என்ன தொடர்பு என்பதை காதல், நகைச்சுவை, நையாண்டி, குடும்ப உணர்வுகளைக் கடந்து சொல்லி இருக்கிறேன். யோகி பாபு வாங்கிய அந்த குளிர்பெட்டிதான் அவரது தாய் ‘குடியிருந்த கோயில்’. அதன் சுருக்கம் தான் ‘குய்கோ’ என்ற தலைப்பு,” என விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அருள் செழியன்.

இதில் விதார்த் கணித ஆசிரியராக நடித்துள்ளார். இவரது ஜோடியாக சாய் பிரியங்கா, மாமா கதாபாத்திரத்தில் இளவரசும், நடித்துள்ளனர். யோகி பாபு ஜோடியாக துர்கா நடித்துள்ளார்.

“இந்த கதையில் இடம்பெற்றுள்ள அனைத்து முகங்களுமே அன்றாடம் நம் வாழ்வில் பார்க்கக்கூடிய, நன்கு அறிமுகமான முகங்களாகவே இருக்கும். படத்தின் எந்த இடத்திலும் எந்தக் காட்சியிலும் தேவையற்ற சினிமாத்தனம் இருக்காது.

“என்னை பொறுத்தவரை கிராமத்துக் கதைகளைத் திரைப்படமாக்கும் போது, யதார்த்தத்தை மீறக்கூடாது. இயல்பான கதையோட்டமும் காட்சி அமைப்பும் இருந்தால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்,” என்கிறார் அருள் செழியன்.

‘குய்கோ’ படத்துக்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். மண் சார்ந்த அவரது இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாம்.

இந்த படத்தில் யோகி பாபுக்கு ஒரு ‘ப்ளாஷ் பேக்’ பாடல் காட்சி உள்ளது. இதற்காக இந்தியில் வெளியான ‘குச் குச் ஹோதா ஹை’ படத்தில் வரும் ‘தும் பாஸு ஆயே’ என்ற பாடலை வாங்கி தமிழ்படுத்தி உள்ளனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்கிறார் இயக்குநர்.

குறிப்புச் சொற்கள்