கத்தி, ரத்தம், வன்முறை அறவே இல்லாத நல்ல படைப்பு ‘திரு.மாணிக்கம்’

2 mins read
af405c54-415f-476d-b2dd-1401de370c32
‘திரு.மாணிக்கம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

ரத்தம், கத்தி, வன்முறை என்று எதுவும் இல்லாமல் நல்லதொரு படைப்பை உருவாக்கி உள்ளதாகச் சொல்கிறார் நந்தா பெரியசாமி.

இவரது இயக்கத்தில் உருவாகும் படம் ‘திரு.மாணிக்கம்’. கதை நாயகனாக சமுத்திரக்கனியும் நாயகியாக அனன்யாவும் நடித்துள்ளனர்.

“தமிழ்த் திரையுலகில் நல்ல கதைகளுக்குப் பஞ்சம் நிலவுவதாகச் சொல்கிறோம். பல ஆண்டுகளாக கதையே இல்லை என்றும் கூறி வருகிறோம்.

“ஆனால் நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியே நூறு கதைகளை எழுதிவிடலாம். தன்னை அண்ணாந்து பார்க்கும் மக்களை, தமிழ் சினிமா குனிந்து பார்ப்பதே இல்லை. அப்படிப் பார்க்கிற முயற்சிதான் இந்த ‘திரு.மாணிக்கம்’ படம்,” என்று பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறார் நந்தா பெரியசாமி.

மாணிக்கம் என்ற சாதாரண மனிதன் எவ்வாறு மரியாதைக்குரிய திரு.மாணிக்கமாகப் போற்றப்படுகிறான் என்பதுதான் கதையாம். மாணிக்கமாக இருந்ததற்கும் திரு.மாணிக்கமாக ஆனதற்கும் இடையில் இருக்கும் வாழ்க்கையை சுவாரசியமாக விவரித்துள்ளனர்.

“மகாத்மா காந்தி பற்றிய படத்தில் இடம்பெற்றுள்ள தலைப்பில் முதலில் ‘காந்தி’ என்று குறிப்பிடுவார்கள். படம் முடியும்போது ‘மகாத்மா காந்தி’ என்று காண்பிப்பார்கள்.

“யாராவது நல்லது செய்ய முயலும்போது ‘எதுக்குங்க வம்பு’ என்று சொல்கிறோம். நல்லவர்களைக்கூட ‘பாவம், அவர் ரொம்ப நல்லவர்’ என்றுதான் இந்த உலகம் குறிப்பிடுகிறது.

“இந்த நவீன உலகில் இப்போதெல்லாம் பக்கத்து வீடுகூட தூரமாகிவிட்டது. இரண்டு பேர் சண்டை போட்டால் அவர்களைப் பிரித்துவிட்டு சமாதானப்படுத்த யாரும் இல்லை. முன்பெல்லாம் ‘நம் மீது அடி விழுந்தாலும் பரவாயில்லை’ என்று சண்டையைத் தடுக்க முன்வருவார்கள். அதையெல்லாம் இந்தப் படம் அலசும்,” என்கிறார் நந்தா பெரியசாமி.

சமுத்திரக்கனியின் நடிப்பு அபாரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இருவருக்கும் இடையேயான பல வருட நட்பு, அன்பு காரணமாக சமுத்திரக்கனி நடித்துள்ளதாகச் சொல்கிறார்.

“பிறரது பிரச்சினைகளை அவரவர் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் சமுத்திரக்கனி. குறைவான வசனங்களோடு வந்து எல்லாவற்றையும் செயலில் காட்டக்கூடிய திறமைசாலி. சொல்வதைவிட செயலில் காட்ட வேண்டும் என்பதுதான் இந்தப் படம் அறிவுறுத்தும் முக்கியமான அம்சம். அதற்கு சமுத்திரக்கனி மிகப் பொருத்தமாக அமைந்துள்ளார்.

“பல ஆண்டுகளுக்கு முன்பு கனி சார் அறிமுகப்படுத்திய அனன்யா இன்று அவருக்கே ஜோடியாகிவிட்டார். இயக்குநர் பாரதிராஜாவின் வயோதிகமும் அனுபவ சாந்தமும் கனிவும் ஒன்றுகூடி வந்துள்ளது,” என்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

குறிப்புச் சொற்கள்