இளையராஜாவின் மகள் பவதாரிணி, ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா ஆகியோரைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் புதிய பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்.
வடக்கன் என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜனனி.
கர்நாடக இசையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள இவர் இந்துஸ்தானி, மேற்கத்திய இசை எனப் பல்வேறு இசைப் பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்தவராம்.
இதற்கு முன்பு தனிப் பாடல்கள், இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் சில பாடல்களுக்கு அனைத்துலக அளவில் விருதுகளும் கிடைத்துள்ளனவாம்.
இந்நிலையில், ‘வடக்கன்’ படம் மூலம் திரையுலகிலும் முத்திரை பதிக்க வந்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடலை ரமேஷ் வைத்யா எழுத, இசையமைப்பாளர் தேவா பாடி உள்ளார்.
அண்மையில் இப்பாடலைப் பதிவு செய்துள்ளனர். பாடலைப் பாடி முடித்ததும் ஜனனியை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார் தேவா.
‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக கதை, எழுதி இயக்கும் படம் ‘வடக்கன்’. இதில் நாடக நடிகர் குங்குமராஜ் கதாநாயகனாகவும் பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் முக்கியமான நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘வடக்கன்’ திரைப்படம்.
தொடர்புடைய செய்திகள்
“இப்படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
“எனவே, அனைத்துத் தரப்பினரும் இதை திரையில் கண்டு ரசிக்க முடியும்,” என்கிறார் அனுபவ எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.