திரை நட்சத்திரங்களின் அடுத்தடுத்த படங்கள்

திரை நட்சத்திரங்களின் அடுத்தடுத்த படங்கள்

3 mins read
373815ec-e1e5-4b81-be62-a50559b68e54
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இவற்றின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகின்றன.

இவை தவிர, தெலுங்கிலும் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பவர், அடுத்த ஓராண்டு காலத்துக்கு தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

மாதத்தின் பாதி நாள்கள் ஹைதராபாத்தில்தான் பிரியாவைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படத்திலும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அடுத்த கன்னடத்துப் பைங்கிளி பிரியாதான் என்று ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.

இப்படி தென்னிந்திய மொழிகளில் கோலோச்சி வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் வேண்டாம் என பிரியாவின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளனராம்.

[ο]தமிழில் சிவகார்த்திகேயனின் 21வது படமான `எஸ்.கே.21’ல் நடித்து வருகிறார் சாய்பல்லவி. மரத்தைச் சுற்றி வந்து காதல் பாடல் பாடும் கதாநாயகியாக மட்டுமல்லாமல், தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவும் சில காட்சிகளை ஒதுக்குமாறு இயக்குநரிடம் கேட்டுக் கொண்டாராம்.

அதற்கு இயக்குநர் சம்மதித்த பிறகே நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல். அடுத்து ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்திப் படத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி.

இதில் ரன்பீர் கபூர் ராமர் ஆகவும் சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகி உள்ளது.

[ο]`மத்தகம்’ வெற்றியைத் தொடர்ந்து மூன்று இணையத் தொடர்களில், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அதர்வா.

மற்றொரு பக்கம், அவருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். அதர்வாவின் சகோதரியும் இளைய சகோதரரும்தான் இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனராம்.

[ο]சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `டி51’ படப்பிடிப்பு அநேகமாக எதிர்வரும் ஜனவரி இரண்டாம் வாரம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

தனுஷின் 51வது படமான இதில், நடிகர் ராஜ்கிரண் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். நாகார்ஜுனாவும் ராஷ்மிகா மந்தனாவும்கூட இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசியல் பின்னணியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையைப் படமாக்குகிறார் இயக்குநர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

[ο]`தங்கலான்’ படத்தை அடுத்து, `சாமி 2’ படத்தைத் தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படைப்பில் நடிக்க உள்ளார் விக்ரம்.

இதை `சித்தா’ படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்க உள்ளார். இது விக்ரமின் 62வது படம்.

இதனையடுத்து, ஆதி நடித்த `அன்பறிவு’ படத்தை இயக்கிய அஸ்வின் ராமின் படத்திலும் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.

[ο]ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யும் அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் கலந்தாலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது தந்தை ரஹ்மானின் இசைக்கூடத்தை சஞ்சய்க்கு சுற்றிக் காண்பித்தாராம் அமீன். மேலும், ரஹ்மானின் இசைப்பள்ளிக்கும் சஞ்சய்யை அழைத்துச் சென்றுள்ளார் அமீன்.

[ο]நடிகர் கமல்ஹாசன், தற்போது சங்கர் இயக்கத்தில் நடிக்கும் ‘இந்தியன்-2’ஆம் பாகத்தின் பணிகள் முடிவடைந்த கையோடு, மணிரத்னம் படத்துக்கான பணிகளில் ஈடுபட உள்ளார்.

இதேபோல் ரஜினியும் அடுத்தடுத்த படங்களில் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் பல இந்திய நகரங்களுக்கும் பறக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்