தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நான் விஜய் ரசிகன்’: இளையர்களைத் துள்ளியாட வைக்கும் இளம் பாடகர் ஹர்ஷ்வர்தன்

2 mins read
164f1470-a58a-4e8d-b4d4-8611ccce163a
தந்தை வித்யாசாகருடன் ஹர்ஷ்வர்தன். - படம்: ஊடகம்

ஹர்ஷ்வர்தன் என்றால் விஜய் ரசிகர்கள் மனதில் ஒருவிதத் துள்ளல் உணர்வும் உற்சாகமும் ஒருசேர ஏற்படுகிறது.

ஹர்ஷ்வர்தனின் இசை நிகழ்ச்சி என்றால், அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகி விடுகின்றன.

மேடையில் பாடல்களைப் பாடியபடி நடனமும் ஆடி அசத்துகிறார் ஹர்ஷ்வர்தன். இவர் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும்.

1990களில் இளையர்களின் மனம்கவர்ந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் என்றால், இன்றுள்ள இளையர்களின் அபிமான பாடகராக உருவெடுத்துள்ளார் ஹர்ஷ்வர்தன்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் முழுநேரப் பாடகனாகச் செயல்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் தொழில்நுட்ப நிபுணராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

“கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் இசைத்துறையில் தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது,” என்கிறார் ஹர்ஷ்வர்தன்.

சென்னை, கேரளா, மலேசியா என்று பல்வேறு இடங்களில் அண்மையில் நடைபெற்ற வித்யாசாகரின் இசை நிகழ்ச்சிகளில் ஹர்ஷ்வர்தனும் முதன்மைப் பாடகராக பங்கேற்றுப் பல பாடல்களைப் பாடினார். இவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

“அந்த நிகழ்ச்சிகளின் போதுதான் அப்பாவுக்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்தது. அவர் மேடை ஏறும்போது கிடைத்த கரவொலியும் கைத்தட்டலும் இன்னும்கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“அவருக்கான வரவேற்பைக் கண்டு நான் உணர்ச்சிப்பெருக்கில் அழுதுவிட்டேன். பெற்ற மகனாக அல்லாமல் ஒரு ரசிகனாக அவரை இவ்வாறு பார்க்க விரும்பினேன். அந்த விருப்பம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி.

“எனக்கு மேடையில் பாடி ஆட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்கான வாய்ப்புகள் இப்போது அமைகின்றன. நான் நடனமாடி பாடுவதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் மேடை ஏறும்போது கைத்தட்டல் கிடைத்தது புது உற்சாகத்தை அளிக்கிறது.

“நன்றாகப் பாடுகிறேன், ஆடுகிறேன், நடிக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள். நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். விஜய் நடித்த ‘கில்லி’, ‘திருமலை’ படங்களுக்கான பாடல்களைப் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். அதனால் இயல்பாகவே நடனத்தில் எனக்கு ஆர்வம் அதிகம்,” என்கிறார் ஹர்ஷ்வர்தன்.

இவர் இன்ஸ்டகிராமில் வெளியிடும் பாடல் பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் ரசித்துப் பாராட்டுகின்றனர். திரைப்படங்களில் இசை அமைக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

“ஆனால் எதற்கும் அவசரப்படவில்லை. பாடகர், நடிகன் என்று பல வேலைகளைச் செய்கிறேன். எதைத் தொடர வேண்டும் எனத் தெளிவாக முடிவெடுத்த பின்னர் முழு வீச்சில் இயங்குவேன்,” என்கிறார் ஹர்ஷ்வர்தன்.

இவர் எதைச் செய்தாலும் ஆதரிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்