நடிகர் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் திருமணம் முடிந்த கையோடு ஒரு திரைப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ப்ளூ ஸ்டார்’. இந்தப் படத்திற்காகத்தான் நிஜ ஜோடி, திரையிலும் இணைந்துள்ளது.
வடசென்னை பகுதியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து கதை எழுதி உள்ளார் இயக்குநர் ஜெயக்குமார்.
“கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் இளையர்களை மோதவிட்டு அரசியல்வாதிகளும் உள்ளூர் பெரிய மனிதர்களும் எப்படிக் குளிர்காய்கிறார்கள் என்பதை இப்படம் விவரிக்கும்.
“ஏமாற்றப்படும் இளையர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அலசியுள்ளோம். கதைப்படி ‘ப்ளூ ஸ்டார்’ என்ற கிரிக்கெட் அணியை வழிநடத்துவார் அசோக் செல்வன். மேலும் பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளியாகவும் இருப்பார்.
“கதைப்படி, கீர்த்தி பாண்டியன் பள்ளி மாணவி. இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். படம் இளையர்களை மட்டும் அல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்,” என்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.