தீபாவளிப் பந்தயத்தில் முந்தும் ‘ஜிகர்தண்டா’

தீபாவளிப் பந்தயத்தில் முந்தும் ‘ஜிகர்தண்டா’

3 mins read
9e55a795-a371-4aba-92cc-9ccf340efa83
‘ஜிகர்ண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே. சூர்யா தோன்றும் காட்சி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கார்த்தியின் ‘ஜப்பான்’ படமும் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படமும் வெளியானதில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘கிடா’, ‘ரெய்டு’ ஆகிய தமிழ்ப் படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

இந்த தீபாவளிப் போட்டியில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கார்த்தி நடித்திருந்த ‘ஜப்பான்’ படமும் ராகவா லாரன்ஸ் நடித்திருந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படமும் முக்கியமாக குறிப்பிடும்படியான படங்கள் ஆகும்.

இந்த இரண்டு படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகத் திகழும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு வெளியானது இந்தப் படம்.

வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.

இப்படத்தின் மிரட்டலான வெற்றியைத் தொடர்ந்து தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் 1975ல் நடக்கும் கதை அம்சத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முக்கியமாக எஸ்.ஜே. சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு ரசிகர்களுக்குத் தரமான தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது. அதனால், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாலை மலர் நாளிதழ் தன்னுடைய திரை விமர்சனத்தில், “படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அவரது தோற்றம், நடை, உடை, உடல் மொழி அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

மற்றொரு கதாநாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டுத் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாகவும் படம் எடுக்கும் இயக்குநராகவும் கவனிக்க வைத்துள்ளார். குறிப்பாக லாரன்ஸைக் காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்துள்ளார்.

ராகவா லாரன்ஸும் எஸ்.ஜே.சூர்யாவும் இறுதிக்காட்சியில் அசத்தியுள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்,” என்று வெளியிட்டிருக்கிறது.

இதுபோன்ற விமர்சனங்களால் முதல் நாளைவிட இரண்டாம் நாளில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து தொடர் விடுமுறை இருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடித்திருந்த ‘ஜப்பான்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது.

கார்த்தியின் ‘ஜப்பான்’ முதல் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலிக்க, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 14.52 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதனால் தற்போதைக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தீபாவளிப் போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி