இந்துஜா: பிடித்துவிட்டால் ரசிகர்கள் ஆதரிப்பார்கள்

இந்துஜா: பிடித்துவிட்டால் ரசிகர்கள் ஆதரிப்பார்கள்

3 mins read
ea437e1a-7513-46ae-ae62-ceebce4d3d7b
இந்துஜா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திரையுலகில் வெற்றிபெற வேண்டுமானால் கதையோடு இணைந்த கதாபாத்திரங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார் இந்துஜா.

‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமான இவர், பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘பிகில்’ படத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் அண்மையில் உருவான படம் ‘பார்க்கிங்’. இதையடுத்து மேலும் மூன்று தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

தாம் வித்தியாசமான கதைக்களங்களைத் தேடுவது போல், அத்தகைய கதைக்களங்களும் தம்மைத் தேடி வருவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“அம்மா, தங்கை என எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்கிறீர்களே என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. எனது முதல் படத்திலேயே தங்கை கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தேன். அதன் பிறகும் திரையுலகில் நாயகியாகவும் தாக்குப்பிடித்து நிற்க முடிகிறது.

“அதனால்தான் கதையோடு இணைந்த கதாபாத்திரங்கள் மீது நம்பிக்கை உண்டு என்பதை அடிக்கடி அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். ஏனெனில், அத்தகைய கதாபாத்திரங்கள்தான் மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

“இதற்கு முன்பு ‘மெர்க்குரி’ படத்தில் காது கேளாத பெண்ணாக, ‘மகாமுனி’ படத்தில் ஐந்து வயதுச் சிறுவனுக்கு தாயாக, ‘பிகில்’ படத்தில் காற்பந்து வீராங்கனையாக எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன்.

“இவ்வாறான கதாபாத்திரங்களிலும் என்னால் இயல்பாக நடிக்க முடியும் என்று இயக்குநர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது எனது திறனுக்கு உத்வேகம் அளிக்கிறது,” என்கிறார் இந்துஜா.

‘மகாமுனி’ பட இயக்குநர் சாந்தகுமார் மிகவும் மென்மையான, அமைதியான சுபாவம் உள்ளவர் என்று குறிப்பிடுபவர், இயக்குநர் செல்வராகவன் படப்பிடிப்பின்போது முன்னறிவிப்பு இன்றி சில சோதனை முயற்சிகளில் ஈடுபடக்கூடியவர் என்கிறார்.

“இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டதாகச் சொல்லும் இந்துஜா, தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களுக்காக தன்னை எந்த அளவுக்கும் வருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு வரலாற்றுப் படம், காதல் கதை, அடிதடிச் சண்டைகள் நிறைந்த படம் என மாறுபட்ட கதைக்களங்களில் நடிக்க ஆசை. எனவே, அதிக சவால் கொடுக்கும் எந்தப் படமாக இருந்தாலும் அது எனக்கு கனவுப் படம்தான். அதில் ஏற்று நடிக்கும் வேடம்தான் எனது கனவுக் கதாபாத்திரம் என்பேன்.

“விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது திரைப்பயணத்தில் முக்கியமான தருணம். விஜய் ரொம்ப அமைதியானவர். எல்லோரிடமும் ஜாலியாகப் பேசிப் பழகுவார். ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பின்போது காற்பந்து தொடர்பான நுணுக்கங்களை ஐந்தே நிமிடங்களில் கற்றுக்கொண்டு நடித்ததைப் பார்த்து அசந்துபோனேன்.

“தனுஷ் உடன் நடித்த அனுபவமும் வித்தியாசமானது. நடிப்பில் பல்வேறு மாறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலி அவர்,” என்று சொல்லும் இந்துஜாவுக்கு ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி படத்தில் நடிக்கக் கேட்டு தம்மை அணுகியபோது ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். தேதி இல்லாததால் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார்.

தற்போது, ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த ‘பார்க்கிங்’, தெலுங்கில் ரவி தேஜா உடன் நடிக்கும் படம் என இடைவெளியின்றி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இந்துஜா.

“அடுத்த ஆண்டு தலைதீபாவளியாக இருக்குமா என்று சிலர் கேட்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. இப்போதுதான் எனது திரைப்பயணம் சரியான திசையில் செல்லத் தொடங்கி உள்ளது. அதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறேன்.

“இந்த ஆண்டு தீபாவளி வேளையில் வேலூரில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். பண்டிகை நாளில் குடும்பத்துடன் இருக்க முடியாமல் போனது வருத்தம் அளித்தாலும் எனது வளர்ச்சிக்காகத்தான் இந்தப் பிரிவு என்பதை நினைத்து மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

“திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் நிலைமை மாறிவிட்டது. திறமை உள்ள யார் வேண்டுமானாலும் சினிமாத்துறையில் நுழைந்து சாதிக்கலாம். ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்கள் விடமாட்டார்கள். நிச்சயம் ஆதரிப்பார்கள். எனினும் அந்த ஆதரவு கிடைக்கும் வரை தன்னம்பிக்கையுடன் செயல்படுபவது மிக அவசியம்,” என்கிறார் இந்துஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்