குறைந்த பட்ஜெட்டில், நல்ல கதையில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று ‘கிடா’ படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
காளி வெங்கட், பூ ராமு, மாஸ்டர் தீபன் மற்றும் பலர் நடித்த ‘கிடா’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு விமர்சகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது.
மதுரை பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தீபாவளிக்கு புதுத் துணி போட ஆசைப்படுகிறார். அதை வாங்கிக் கொடுக்க அவனது தாத்தா எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
குறைவான திரையரங்குகளில் குறைவான காட்சிகளில் இப்படம் வெளியானது. இம்மாதிரியான சிறிய படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் திரையரங்குகள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் ரா வெங்கட் முகநூலில், “குறைந்த பட்ஜெட் என்பதால் திரை விமர்சனத்தைப் பார்த்துவிட்டுத்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதற்குள் படம் ஓடவில்லை என்று காட்சிகளை நிறுத்திவிடுகிறார்கள்.
“மக்களே! உங்கள் வீட்டிற்கு அருகில் ‘கிடா’ படம் ஓடினால் தயவுசெய்து போய் பாருங்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சிறிய படங்களின் இந்த அவல நிலையை தயாரிப்பாளர்கள் மாற்றப் போகிறார்களா அல்லது ரசிகர்கள் மாற்றப் போகிறார்களா?” என்ற கேள்விக்குறியுடன் என்று பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர்.

