சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் எதிர்த்து கேள்வி கேட்கும் படம் ‘கொட்டுக்காளி’

சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் எதிர்த்து கேள்வி கேட்கும் படம் ‘கொட்டுக்காளி’

2 mins read
54f6e06b-dd55-443d-8670-97165ce506fb
‘கொட்டுக்காளி’ படத்துக்கான பூசையில் சூரி, சுவாதி, இயக்குநர் வினோத்ராஜ். - படம்: ஊடகம்

‘விடுதலை’ படத்தை அடுத்து தற்போது ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூரி.

இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகிறது இப்படம். வினோத்ராஜ் ஏற்கெனவே ‘கூழாங்கல்’ என்ற தரமான படைப்பை இயக்கியவர். ஆஸ்கார் விருது வரை சென்ற படம் அது.

ஆணாதிக்க மனோபாவத்தால் அல்லல்படும் குடும்ப அமைப்பின் பரிதாப உலகத்தில் நுழைந்து, அவர்களின் இயல்பு வாழ்க்கையின் சில கணங்களை கச்சிதமாக எடுத்துக்காட்டியதில் ஒரு படைப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய வினோத்ராஜின் அடுத்த படைப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

‘கொட்டுக்காளி’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். ‘கூழாங்கல்’ படத்தைப் பார்த்த பிறகு நம்பிக்கையுடன் முதலீடு செய்து உள்ளாராம்.

“‘கொட்டுக்காளி படம்’ சமூகக் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. என் வாழ்க்கையை ஒட்டி நடந்த உண்மைச் சம்பவம் குறித்து பதிவு செய்ய்யப் போகிறேன்.

“சில முட்டாள்தனமான விஷயங்களை என் வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன். சில சடங்குகள், சம்பிரதாயங்களைக் கேள்வி கேட்க வேண்டும் என்ற முடிவுடன் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். இது சமூகத்திற்குத் தேவையான படமாகவும் பல விவாதங்களை எழுப்பக் கூடிய படைப்பாகவும் இருக்கும்.

“படத்தின் நாயகன் சூரி அண்ணன், கதையின் ஆழம் வரைக்கும் சென்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார்.

“நடிகை அன்னாபென்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதைவிட தன் கண்களையும் சேர்த்துக்கொள்ளும் அவரது நடிப்புக்கும் நான் ரசிகன்.

“எனது ‘கூழாங்கல்’ படத்தைப் பார்த்த பலரும், ‘மிக நன்றாக இருந்தது… அப்படியே என் கதை, மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது’ என்று கூறினர். அவர்களை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எங்களைச் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று திரை உலகிற்கு வரும் இளையர்கள் கூறுகின்றனர்.

“நான் அடைந்துள்ள இந்த இடம் மிகவும் நேசத்திற்கு உரியது. அதை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்,” என்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.

குறிப்புச் சொற்கள்