கதையும் உள்ளடக்கமும்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பங்களிக்கும்: இயக்குநர் மோகன்.ஜி

கதையும் உள்ளடக்கமும்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பங்களிக்கும்: இயக்குநர் மோகன்.ஜி

2 mins read
ae2d9c3c-0797-45b3-a126-e2740bdd24a1
‘‘வா வரலாம் வா’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

ஒரு படத்தின் வெற்றி என்பது கதையையும் உள்ளடகத்தையும்தான் நம்பியுள்ளது என்று இயக்குநர் மோகன்.ஜி. தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘வா வரலாம் வா’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒரு படத்தின் தயாரிப்புச் செலவுதான் அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நடிகர் விஷால் கூறியதை தம்மால் ஏற்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

“திரைப்படங்களை குறைந்த செலவிலும் அதிக செலவிலும் எடுக்கப்பட்டவை என பிரித்துப் பார்க்க வேண்டாம். இவ்வாறு நடிகர் விஷால் கருத்து தெரிவித்ததை அடுத்து, குறைந்த செலவில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வருத்தத்தில் உள்ளனர். சில இயக்குநர்களுக்குப் படம் இயக்கும் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறப்படுகிறது,” என்றார் மோகன்.ஜி.

‘திரௌபதி’ படத்தை தாம் 75 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கியதாகவும் அந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூல் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை ரூ.4 கோடியில் உருவாக்கினோம். அப்படம் தமிழகத்தில் ரூ.13 கோடி வசூலித்தது. மேலும், ‘பகாசூரன்’ படம் ரூ.5 கோடியில் உருவானது. அதிலும் லாபம் கிடைத்தது.

“இந்த மூன்று படங்களையும் தயாரித்தது நான்தான். மூன்றுமே லாபம் ஈட்டித் தந்தன. இவையெல்லாம் விஷால் குறிப்பிட்டதுபோல் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால் லாபம் அதிகம்,” என்றார் மோகன்.ஜி.

அதேசமயம் குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களை ஓடிடி தளங்கள் கண்டுகொள்வதில்லை என்று விஷால் கூறுவது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய படங்களை ஓடிடி தளங்களின் நிர்வாகம் அறவே மதிப்பதில்லை என்றார்.

“அயோத்தி’, ‘போர்தொழில்’ ஆகிய படங்கள் ரூ.4 முதல் ரூ.5 கோடியில் உருவாக்கப்பட்ட படங்கள்தான். அவையும் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே செலவுக்கும் வெற்றிக்கும் தொடர்பில்லை. நல்ல கதைதான் முக்கியம்,” என்றார் மோகன்.ஜி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்