காக்கா, கழுகு கதை சர்ச்சை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் அது பேசு பொருளாகி உள்ளது. லெஜண்ட் சரவணன் ரஜினி மற்றும் விஜய்யை சீண்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாள்களாக வலைத்தளங்களில் காக்கா - கழுகு என்ற சர்ச்சைகளை வைத்து இரு பெரும் நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே இன்று வரை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலக கட்டடத் திறப்பு விழா சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது.
இதில் தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன் கலந்து கொண்டார். அப்போது பேசிய லெஜன்ட் சரவணன், “இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் திரைத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“ஆனால் அதில் ‘காக்கா - கழுகு’ கதைகள், இவருக்கு அந்தப் பட்டம் இவருக்கு இந்தப் பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும்,” என்று கூறி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ஒரு கதை ஒன்றைக் கூறினார். “காட்டில் பெரிய விலங்குகளை எப்போதும் சிறிய விலங்குகள் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
“உதாரணத்திற்கு காக்கா அனைவரையும் தொந்தரவு செய்யும், ஆனால், கழுகு யாரையும் தொந்தரவு செய்யாது.
“காக்கா கழுகின் மேல் அமர்ந்துகொண்டு கழுகைக் கொத்தி துன்புறுத்தும். அப்போது கழுகு எதுவும் செய்யாமல் மேலே ஆகாயத்தில் பறக்கத் தொடங்கும். மேலே செல்லச் செல்ல காக்காவால் மூச்சு விடமுடியாமல் கீழே விழுந்துவிடும். உலகின் உன்னதமான மொழி மௌனம்தான்.
“நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரைத்தான் சொல்கிறேன் என்று வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். இங்கு குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போய்க்கொண்டே இருக்கணும்,” என்று பேசியிருந்தார். ரஜினி மறைமுகமாக நடிகர் விஜய்யை தாக்கினார் என்று சொல்லப்பட்டது. அதைத்தான் லெஜண்ட் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.