பல பாகங்கள் கொண்டது துருவ நட்சத்திரம்:கெளதம் மேனன்

3 mins read
aa42e54f-3e33-47f9-8139-dc8a7c62a59c
படத்தில் விக்ரம் பெயர் துருவ். - படம்: ஊடகம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, ராதிகா, பார்த்திபன், விநாயகன், சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’.

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு இஸ்தான்புல், பல்கேரியா, ஜார்ஜியா, நியூயார்க், துருக்கி, அபுதாபி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் மேல் விவரங்கள் வெளியிட்டுள்ளார்.

“இப்படம் ஒரு உளவாளி தொடர்பான படம். இது நடிகர் சூர்யாவுக்காக நான் எழுதிய கதை. அவர் சில காரணங்களால் நடிக்கவில்லை. பிறகு ரஜினிகாந்திடம் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. விக்ரம் இந்தக் கதைக்குள் வந்ததும் சில மாற்றங்கள் செய்தேன்,” என்றார் கெளதம்.

“சூர்யாவுக்காக நான் பண்ணிய கதையில் உணர்வுப்பூர்வமான பின்னணி கதை இருந்தது. 20 வயது இளைஞனின் கதை அது. ஆனால் விக்ரம் படத்தில் இணைந்தவுடன் அதை நீக்கிவிட்டேன்” என்று கெளதம் குறிப்பிட்டார்.

“மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்து இப்போது 15 வருடம் ஆகிவிட்டது. 15வது வருடத்தில் நடக்கும் கதையாக இதை உருவாக்கி இருக்கிறேன். இது தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படம். முதல் பாகமான இந்தப் படத்தின் முடிவில் ஒரு திருப்புமுனை இருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார், வேறு ஒரு கதாநாயகன் கூட வரலாம். படம் வெற்றிபெற்றாலும் இல்லை என்றாலும் இந்தக் கதையைத் தொடர்ச்சியாகப் பண்ண இருக்கிறேன்,” என்றார் கெளதம்.

“படத்தில் விக்ரம் பெயர் துருவ். துருவ நட்சத்திரம் என்றால் அதை ‘ஸ்பெஷல் ஸ்டார்’ என்று சொல்வோம். விக்ரம் பின்னணியில் கதை நடப்பதால் துருவ நட்சத்திரம் என்று தலைப்பு வைத்திருக்கிறேன்,”.

தொடர்புடைய செய்திகள்

“ஒரு பிரச்சினை காரணமாக மற்ற இயக்குநர்கள் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். ஆனால், அதிகமான வாய்ப்புகள் வந்தன. இப்போது கூட ஒரு பெரிய கதாநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், என் வீட்டில், நான் நடிகனாக வெளியில் செல்வதை விரும்பவில்லை. நீ இதற்காக வரவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் படங்களில் நடித்ததை கற்றலாகத்தான் பார்த்தேன்,” என்றார் கெளதம்.

இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நவம்பர் 24ம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் சினிமா வட்டாரங்கள் கூறின.

ஆனால் படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனையே நவம்பர் 19ஆம் தேதி தான் முடிந்தது. ஆனால், தமிழக விநியோக உரிமைக்கான வியாபாரம் இன்னும் முடியவில்லை என்கிறார்கள். அதனால் படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

சாட்டிலைட், ஓடிடி வியாபாரங்களையும் முடித்த பிறகுதான் பட வெளியீடு குறித்த உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள் கவனிப்பாளர்கள்.

மேலும் படத்தின் நாயகன் விக்ரம் இதுவரை இப்படம் குறித்து எந்தவிதமான பதிவுகளையும் அவரது சமூக ஊடகத்தில் போடவில்லை.

ஜனவரி மாதம் வெளியாக உள்ள ‘தங்கலான்’ படத்தைப் பற்றி மட்டுமே பதிவிடும் விக்ரம் ‘துருவ நட்சத்திரம்’ படம் சார்ந்த பதிவுகளைத் தவிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை என்று கவனிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அது திடீரென ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்