விஜய்யால் குந்தவை என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரிஷாவிற்கு பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன.
அண்மையில் மன்சூர் அலிகானின் ஆபாசக் காணொளியால் மன உளைச்சலுக்கு ஆளானார் திரிஷா. ஆனால் அவரின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் ரசிகர்கள் அவரை ‘சவுத் குயின்’, ‘குந்தவை’ என்று செல்லமாக அழைத்து அவருக்கு ஆறுதலாகப் பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் தெலுங்கு முன்னணி நடிகருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்திய கதையில் நாயகியாக நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் வரவுசெலவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
திரிஷாவின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘தி ரோடு’ படமும் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ‘லியோ’ திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கின்றன.
அதன் பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்திலும் நடிக்க உள்ளார் திரிஷா.
தற்பொழுது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தொடர்ந்து விஜய், அஜித், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் திரிஷாவின் அடுத்த படம் குறித்த செம்மையான செய்தி வெளியாகி இருக்கிறது. அண்மைக்காலமாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்த திரிஷா அவரது அடுத்த படத்திற்காக டோலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவிற்குப் பெருமையைப் பெற்றுத் தந்த நடிகர் அல்லு அர்ஜுனின் 22வது படத்தில் கதாநாயகியாக இணைந்திருக்கிறார் திரிஷா. அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சினிமாவில் வரலாற்றுக் காலப் படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் 22வது படமும் சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய சரித்திரக்காலப் படமாக உருவாக இருக்கிறது எனும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்குகிறார். ஏற்கெனவே 2005ஆம் ஆண்டில் திரிவிக்ரம் இயக்கிய ‘அதாடு’ என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்திய கதையாக உருவாகும் இந்த வரலாற்றுப் படத்தின் பட்ஜெட்டும் மிகவும் பெரியதாம். கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மேல் இந்தப் படத்தின் பட்ஜெட்டை நிர்ணயத்திருக்கிறார்களாம். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கவிருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது அவரது ‘புஷ்பா’ படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழில் சாதித்ததுபோல தெலுங்குத் திரையிலும் சாதிக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.

