‘கங்குவா’ படப்பிடிப்பில் தனக்கு காயம் என்று கேள்விப்பட்டு விசாரித்தவர்களுக்கு, “நான் நலமுடன் இருக்கிறேன்,” என்று நன்றி தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சூர்யா.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும்போது, எதிர்பாராதவிதமாக மேலே தொங்கிக்கொண்டு இருந்த கேமரா ஒன்று அறுந்து விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பியதால் சூர்யா விரைந்து நகர்ந்தார். அப்படியும் அவருடைய தோளில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில், “அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக, நலமுடன் இருக்கிறேன். உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல இந்தி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாகிறார்.
மகாபாரத கர்ணன் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ‘கர்ணா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சூர்யா, கர்ணனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க திஷா பதானி, பிரியங்கா சோப்ரா உட்பட சில நடிகைகளை யோசித்துள்ளனர். இறுதியில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படம் இந்தியில் உருவானாலும் பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. இதற்காக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இருந்தும் நடிகர்களை நடிக்க வைக்க இருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது. எக்சஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

