அன்று எடுத்த முடிவுதான் இன்று நல்ல கதாபாத்திரங்கள் அமைய காரணம்: ஜோதிகா

அன்று எடுத்த முடிவுதான் இன்று நல்ல கதாபாத்திரங்கள் அமைய காரணம்: ஜோதிகா

1 mins read
000491b5-8fb8-48b8-ab24-2f5169121cc4
‘காதல் தி கோர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் மம்முட்டி, ஜோதிகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நடிக்க வந்த புதிதில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதற்கு மட்டுமே தாம் முக்கியத்துவம் அளித்ததாகக் கூறியுள்ளார் ஜோதிகா.

இதன் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிடலாம் என்றும் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் தாம் கணக்குப்போட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘காதல்; தி கோர்’ என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. இப்படத்தின் விளம்பர நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இதில் தனது நடிப்புப் பசிக்குத் தீனி போடும் வகையில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாகக் கூறினார்.

“பதினேழு வயதில் சினிமா துறையில் காலெடுத்து வைத்தேன். அந்த வயதில் இந்தத்துறை குறித்த புரிதல் இல்லை. எனவே, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை மட்டுமே பெருமையாகக் கருதினேன்.

“அதனால் அப்படிப்பட்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தேன். ஒரு கட்டத்தில் நல்ல கதாபாத்திரங்களும் கதையும்தான் நம்மை நீண்ட காலத்திற்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்யும் என்ற உண்மை புரிந்தது,” என்றார் ஜோதிகா.

அப்போது எடுத்த முடிவின் காரணமாகவே கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், பிறகு நல்ல படங்கள் அமைந்து வருகின்றன என்றார்.

இதற்கிடையே, ‘காதல்: தி கோர்’ சில சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. இப்படத்துக்கு சில நாடுகள் தடைவிதித்துள்ளன. எனினும், இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. தொடர்ந்து சவாலான பாத்திரங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம் ஜோதிகா.

குறிப்புச் சொற்கள்