‘பருத்திவீரன்’: கணக்கு கேட்ட தயாரிப்பாளர்; அமைதி காத்த கார்த்தி, பொங்கி எழுந்த திரைக் கலைஞர்கள்

‘பருத்திவீரன்’: கணக்கு கேட்ட தயாரிப்பாளர்; அமைதி காத்த கார்த்தி, பொங்கி எழுந்த திரைக் கலைஞர்கள்

2 mins read
32d3709d-4cda-499f-970e-60767b28cca1
(இடமிருந்து வலமாக) இயக்குநர் அமீர், சூர்யா, கார்த்தி. - படங்கள்: ஊடகம்

‘பருத்தி வீரன்’ படம் குறித்து மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. அமீர் இயக்கிய இப்படத்தில்தான் நடிகர் கார்த்தி தமிழ் திரை உலகில் நாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தின் தயாரிப்புச் செலவு குறித்தும் படபிடிப்பின்போது ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அமீரும் ஒருவர் மீது மற்றொருவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர்.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் மீண்டும் அமீர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஞானவேல்ராஜா. அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து அமீரும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் திரைக்கலைஞர்கள் பலர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் சசிகுமார் கூறுகையில் ‘அண்ணன் அமீர் குறித்து ஞானவேல்ராஜா தெரிவித்துள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் முழுச்செலவுக்கான தொகையை நான்தான் கடனாக கொடுத்தேன். அந்தப் பணம் எனக்கு திரும்பி வராத நிலையில் படம் வெளியீடு கண்டது. இது தொடர்பாக இயக்குநர் அண்ணன் அமீர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மை,” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனியும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெரும் தவறு இழைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“‘பருத்தி வீரன் பட உருவாக்கத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நான் அமீருடன் இருந்தேன். எனவே எனக்கு அனைத்து பிரச்சினைகளும் தெரியும். ஒரு கட்டத்தில் தம்மால் படத்தை தயாரிக்க முடியாது என ஞானவேல்ராஜா கை கழுவி விட்டார். சூர்யாவும் தம்மால் முடியாது என்று கூறிவிட்டார்.

“ஆனால் மூத்த கலைஞர் சிவகுமார் தன் மகனான கார்த்தியின் கைப்பிடித்து அமீரிடம் ஒப்படைத்து இருந்தார். அந்த ஒரே காரணத்திற்காக பலரிடம் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ஐந்து லட்சம் ரூபாய் என்று கடன் பெற்று படத்தை முடித்தார் அமீர். அவர் இல்லை என்றால் கார்த்தி என்ற புதிய கதாநாயகன் தமிழ்த் திரை உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் கார்த்தி அமைதி காப்பதை ஏற்க முடியவில்லை.

“பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஒருவரைபற்றி பொதுவெளியில் இவ்வாறு தவறாக பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது,” என கூறியுள்ளார் சமுத்திரகனி.

குறிப்புச் சொற்கள்