மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ள ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார்.
இப்படம் அண்மையில் வெளியானது. வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்முட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பதும் உச்ச நட்சத்திரங்கள் யாராவது தன்பாலின ஈர்ப்பாளராக நடிப்பார்களா என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூகத்தில் நிகழும் இந்தப் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்ததால்தான் மம்முட்டி இக்கதையைத் தயாரித்து நடித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக, கட்டாயத்தில் திருமணம் செய்து ஒரு பெண்ணை 20 ஆண்டுகளாக வதைத்து விட்டோமே என்பதை நினைத்து ‘தெய்வமே’ எனக் கதறி அழும் காட்சியில் மம்முட்டியின் நடிப்புத் திறன் உச்சக்கட்டக் காட்சியாக இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.
படம் முழுவதும் மனதில் பாரத்தைச் சுமக்கும் நாயகியாக வரும் ஜோதிகாவின் நடிப்பும் கதையோடு ஒன்றியிருக்கிறது.
தன் கணவனுக்குத் துணையாக நிற்கும் மனைவியாக, அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரிந்து செல்லும் பெண்ணாக ஜோதிகா சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விமர்சகர்களின் நினைவில் மாறாது இருப்பார்!
இந்நிலையில் இந்தப் படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம். உங்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் ‘காதல் தி கோர்’ திரைப்படத்தைப் பாருங்கள்.
“மம்முட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ. உங்கள் நடிப்பில் இருந்து என்னால் நீண்ட காலத்திற்கு வெளியே வர முடியாது. லவ் யு ஜோதிகா. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜெண்ட்,” என்று பதிவிட்டுள்ளார்.

