ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களிலும் கனமான பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குபவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இவர், மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படத்தைப் பார்த்து மனம் தாளாமல் ஒரு குழந்தையைப் போல அழுததாகக் கூறியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இவர் ஏற்றிருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்று இவருக்கான ஒரு தனி அங்கீகாரத்தைக் கொடுத்தது. தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜோடியாக இவர் நடித்திருந்த ‘கட்டா குஸ்தி’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நாயகியாக மட்டுமின்றி, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘காதல் தி கோர்’ படம் குறித்து பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
முதன்முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேத்யூவை (மம்மூட்டி) வேலை ஓய்வுக்குப் பின் விவாகரத்து செய்ய அவரது மனைவி ஓமணா(ஜோதிகா) வழக்குத் தொடர்கிறார். அதில் மேத்யூ ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் எனக் குறிப்பிடுகிறார்.
இறுதியில் மேத்யூவும் ஓமணாவும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை. வித்தியாசமான கதைக்களம் குறித்து பலரும் பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் படம் குறித்து பாராட்டி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே, இந்த ஆண்டின் சிறந்த படமாக ‘காதல் தி கோர்’ அமையும் என நடிகை சமந்தா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது எக்ஸ் பக்கத்தில், “மம்மூட்டி அவர்களே நீங்கள் தொடர்ந்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தனிமை, பயம், வலி, நீங்கள் எடுக்கும் முடிவின் கனம் என அனைத்தையும் நானும் உணர்ந்தேன்.
“படத்தில் உங்களது ஒவ்வொரு பார்வையும் எனது இதயத்தைப் பிழிந்தது. படத்தின் சிறந்த பகுதியே இரண்டாம் பகுதியில் வரும் ‘என்ட தெய்வமே’தான். திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல அழுதேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆண்களும் பெண்களும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு படம் என் பார்வையில் சமநிலையில் இருக்கவேண்டும்.
“சினிமா என்பது சமூகத்தையும் நம் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. இருபாலாரின் பங்களிப்பும் படத்தில் இருந்தால்தான் அந்தப் படம் பெரும்பாலான மக்களை ஈர்க்கும்,” என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
இன்ஸ்டகிராமில், “அழகான மனம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்தான், காதல் தி கோர் போன்ற திரைப்படங்கள் கிட்டும்,” என நடிகர் சூர்யா பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
“மம்மூட்டியின் நல்ல சினிமா மீதான காதலுக்கும் உத்வேகத்துக்கும் இப்படி ஒரு அருமையான படத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு தலைவணங்குகிறேன்.
“காதல் என்னவாக இருக்கும் என்பதைக் காட்டி அனைத்து இதயங்களையும் வென்றதற்காக என் ஓமனா ஜோதிகாவுக்கு வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சூர்யா.