குழந்தை நட்சத்திரமாக நடித்து கோடீஸ்வரியான நயன் அனிகா

2 mins read
691c1ffc-fc4a-4436-8fda-8f84c4c648fa
அனிகா சுரேந்திரன் - படம்: ஊடகம்

தென்னிந்தியத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகை அனிகா சுரேந்திரன்.

தனது மூன்று வயதிலேயே ‘சோட்டா மும்பை’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘கதை துடாருன்னு’,’ஃபோர் ஃப்ரெண்ட்ஸ்’ என அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்து வந்தார்.

ஒருபுறம் நடிப்பு, மறுபுறம் மாடலிங் என தனது திறன்களை மேலும் மெருகேற்றி வரும் இவர், குழந்தை நட்சத்திரம் என்ற தோற்றத்தில் இருந்து மெல்ல மெல்ல மாறி தற்போது நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக மின்னியது முதல் நாயகியாக ஆனது வரை நயன் அனிகா சேர்த்து வைத்துள்ள சொத்தின் மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பின்னர் அனிகா, லட்சங்களில் சம்பளம் வாங்கத் துவங்கி விட்டாராம்.

அதன்படி 2019ல் இவரின் ஆண்டு வருமானம் ரூ.1.4 கோடி என்றும் தற்போது ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாகப் பெறுகிறாராம். மேலும் சொந்த வீடு, கார், போன்றவற்றை வைத்திருக்கும் அனிகா ஏறக்குறைய ரூ.16 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2015ல் இயக்குநர் கெளதம் மேனன், அஜித் - த்ரிஷாவை வைத்து இயக்கிய ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தில் ஈஷா என்கிற கதாபாத்திரத்தில் சுட்டிப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்.

இப்படத்திற்குப் பின்னர் அனிகாவை பலர் ‘தல’ (அஜித்) பொண்ணு என்று அழைக்கத் துவங்கினர். அத்துடன், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பல விருதுகளையும் அனிகா பெற்றுள்ளார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் ‘மிருதன்’, ‘நானும் ரவுடி தான்’ படத்தின் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரம், மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகள் என தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்தார்.

குறிப்பாக 2019ல் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். அதேபோல் நயன்தாராவின் தோற்றத்துடன் அனிகா இருப்பதாகக் கூறி இவரை குட்டி நயன்தாரா என்றும் பல ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இருப்பினும், தமிழில் இன்னும் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனுஷின் 50வது படம், வாசுவின் ‘கர்ப்பிணிகள்’ என சில படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்