தமிழ் ரசிகர்களை ஏமாற்ற இயலாது: ஸ்ரீ லீலா

2 mins read
5689007c-dceb-4052-b833-28ff9bea1c2c
ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

தெலுங்கில் நடிகைகளுக்கான பட்டியலில் முதலிடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார் இளம் நாயகி ஸ்ரீ லீலா.

அங்கு முன்னணயில் உள்ள மகேஷ் பாபு, பவன் கல்யாண், ராம் பொத்தினேனி, மூத்த நடிகர் பாலகிருஷ்ணா, ரவி தேஜா என அனைவருடனும் இணைந்து நடித்து கொண்டு இருக்கிறார்.

அடுத்து தமிழ்த் திரை உலகத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் இவரது இலக்காம். தமிழ்த் திரை உலகத்தினரையும் தமிழ் மக்களையும் பார்க்கும்போது தமக்கு வியப்பாக இருப்பதாக சொல்கிறார் ஸ்ரீ லீலா.

“தமிழ் ரசிகர்களை அவ்வளவு எளிதில் யாராலும் ஏமாற்றிவிட முடியாது. காரணம் அவர்கள் ஒருவர் மீது வெளிப்படுத்தும் அன்பும் அளிக்கும் ஆதரவும் அப்படிப்பட்டவை. இத்தகைய நல்ல உள்ளம் கொண்டவர்களை ஏமாற்றும் எண்ணம் யாருக்கும் வராது.

“ஒரு நடிகரையோ, நடிகையையோ அவர்களுக்குப் பிடித்துவிட்டால் போதும். தங்கள் வீட்டுக் குழந்தையிடம் எப்படி அன்பு பாராட்டி, கவனித்துக் கொள்வார்களோ அதுபோன்று அபிமான கலைஞர்களையும் கவனித்துக் கொள்வார்கள்,” என்று சொல்லும் ஸ்ரீ லீலா தமிழில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

திரை உலகில் கால்பதித்துள்ள மற்றொரு இளம் மருத்துவர் இவர். கடந்த 2021ல் தான் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார்.

படிப்பு முடியும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையாம். அதன் காரணமாக பல நல்ல பட வாய்ப்புகள் தேடி வந்தபோதும் அவற்றையெல்லாம் ஏற்க முடியாமல் போனதாம்.

“இனிமேல் எந்த வாய்ப்பையும் தட்டி கழிக்க வேண்டிய அவசியமில்லை. என் குடும்பத்தாரிடம் படிப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் மருத்துராவேன் என்று உறுதி அளித்து இருந்தேன். அதை நிறைவேற்றி விட்டதால் இப்போது எந்தவிதமான தயக்கமும் கவலையும் இல்லை.

“படிப்பு காரணமாகவே சில படங்களுக்கு கால்ஷிட் அளிப்பதில் நான் குளறுபடி செய்வதாக தகவல் வெளியானது. இனிமேல் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறேன்,” என்று சொல்லும் ஸ்ரீ லீலாவிற்கு நடனத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டாம்.

தனது உடற்கட்டை பராமரிக்க இவர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு எல்லாம் செல்வதில்லை. மாறாக, நேரம் கிடைக்கும்போது தீவிர நடன பயிற்சியில் ஈடுபடுகிறார். தமிழில் பல கதாநாயகர்களை இவருக்கு பிடிக்குமாம். குறிப்பாக விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் என்றால் தவறாமல் பார்த்து விடுகிறார்

“அதற்காக மற்ற நடிகர்களின் படங்களை பார்க்க மாட்டேன் என்று முடிவு செய்துவிட வேண்டாம். கூடுமானவரை நல்ல தமிழ்படங்களை அனைத்தையுமே பார்த்து விடுவேன். அப்போதுதான் தமிழ் ரசிகர்கள் எந்தமாதிரியான படங்களை விரும்புவார்கள் என்பது தெரியவரும்.

“நடிகையாவது அவ்வளவு எளிதல்ல. நல்ல நடிகை என்று பெயரை பெற்று அதை தக்கவைத்துக் கொள்வதே எனது தற்போதைய இலக்கு. எதைச் செய்தாலும் நூறு விழுக்காடு நேர்மையாக செயல்படவேண்டும் என்பதுதான் எனது கொள்கை. அதை இறுதி வரை கடைபிடிப்பேன்.

“எனது பெற்றோர் அறிவுறுத்திய பலவற்றில் இந்த அறிவுரை மிக முக்கியமானது,” என்கிறார் இளம்நாயகி ஸ்ரீ லீலா.

குறிப்புச் சொற்கள்