தொடரும் அவமானங்கள்: வருத்தத்தில் மகிமா

1 mins read
0a46c780-6f3e-4df2-ab17-b5ccf8a2a2d2
மகிமா நம்பியார் - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ் சினிமாவில் ‘சாட்டை’ படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை மகிமா நம்பியார், தெலுங்குத் திரையுலகில் தான் எதிர்நோக்கிய அவமானம் குறித்து மனம் வருத்தப்பட்டுள்ளார்.

‘குற்றம் 23’, ‘மகாமுனி’, ‘ரத்தம்’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட சில முக்கிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியார், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

“திரையுலகில் சில அவமானங்கள் ஏற்படுவது வழக்கம்தான். நாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிவிட்டு பின்னர் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கழட்டிவிட்டு விடுவதுதான்.

“ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி அளவுக்கு நடந்து முடிந்தபின்பும் நாயகிகள் நீக்கப்படுவது தொடர்ந்து அதிகம் நடக்கிறது. நானும் இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டுள்ளேன்.

“தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபல நாயகனுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனேன். நான்கு நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பின்னர், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு அழைப்பதாகக் கூறினார்கள்.

“நானும் தயாராக இருந்தேன். ஆனால், எந்தவொரு அழைப்பும் வரவில்லை.

“ஒரு நாள் சம்பந்தப்பட்ட படத்தின் மேலாளர் தொலைபேசியில் அழைத்து, நான் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் பிரபல நாயகி ஒருவர் நடிப்பதால் எனக்கு வாய்ப்பில்லை,” என்றார்.

“இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பல நடிகைகள் இதுபோன்ற அவமானங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் இப்போதுவரை கிட்டவில்லை, இனியும் கிட்டுமா என்பதும் கேள்விக்குறிதான்,” என வேதனை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்