சந்தானத்தின் அறிவுரையை மறக்கமாட்டேன்: ராதிகா

3 mins read
e516e48a-3aaa-40c0-a869-afa3bb02dcae
ராதிகா பிரீத்தி. - படம்: ஊடகம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை களின் பட்டியலில் ராதிகா பிரீத்தியும் இணைந்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘80ஸ் பில்டப்’ படத்தின் கதாநாயகி இவர்.

தமிழில் சரளமாகப் பேசும் ராதிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல்.

“நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் வீட்டில் நிறைய கட்டுப்பாடுகள். எந்த விஷயத்திலும் நேரம் தவறாமை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருப்பார்.

“ஒருபக்கம் முழுமையான அன்பு கிடைக்கும் எனில், மறுபக்கம் சத்தமாகச் சிரித்தால்கூட அடி விழும். வணிகத்துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. எறிபந்தாட்ட வீராங்கனையாக தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பேட்மின்டன் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். இதிலும் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளேன்,” என்கிறார் ராதிகா பிரீத்தி.

கல்லூரியில் படிக்கும்போதுதான் கன்னடப் பட வாய்ப்புகள் தேடி வந்தனவாம். அங்கு சில படங்களில் நடித்து முடித்த பின்னர் தமிழில் ‘எம்பிரான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பிரபல நடன இயக்குநர் சுவர்ணா பாபு இயக்கத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஒரியா மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படி எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த நிலையில், ராதிகாவின் தாயாரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அதனால் திரைப்பட வாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு வீட்டிலிருந்தபடி அம்மாவை கவனித்துக் கொண்டாராம். இதனால் தேடிவந்த வாய்ப்புகளை மறுத்து உள்ளார்.

சில காலத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு எடுத்தபோது, எதிர்பார்த்த படவாய்ப்புகள் அமையவில்லை. எனினும், சின்னத்திரை தொடர்கள் சிலவற்றில் நடிக்க அழைத்தனராம்.

“சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ தொடரில் நாயகியாக என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆறேழு திரைப்படங்களில் நடித்து கிடைக்காத புகழ் சின்னத்திரையில் நடித்த போது கிடைத்தது. குறிப்பாக ‘பூவே உனக்காக’ தொலைக்காட்சித் தொடர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து தந்துள்ளது எனலாம்.

“அதில் நான் ஏற்று நடித்த பூவரசி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ்நாட்டில் நான் எங்கு சென்றாலும் பூவரசி என்றுதான் ரசிகர்கள் என்னை அழைக்கின்றனர். இந்தப் புகழ்தான் சந்தானம் படத்தில் இணையும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது,” என்கிறார் ராதிகா பிரீத்தி.

சின்னத்திரை நடிகை என்று கூறி பத்துக்கும் மேற்பட்ட படத்தயாரிப்பு நிறுவனங்கள் இவரை புறக்கணித்தனவாம். நடிப்புத் தேர்வு, ஒப்பனைத் தேர்வு என எல்லாம் முடிந்த பிறகும் சின்னத்திரை நடிகை என்பதால் இவரை ஒதுக்கி விட்டனர்.

“இந்நிலையில் இயக்குநர் கல்யாண் என் மீது நம்பிக்கை வைத்து ‘80ஸ் பில்டப்’ பட வாய்ப்பை அளித்துள்ளார். எத்தனையோ பேர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து முடித்த பின்னர் திரையுலகில் சாதித்து உள்ளனர். நீ திறமைசாலி, நன்றாக நடிக்கிறாய். எனவே உன்னால் சாதிக்க முடியும்’ என்று நம்பிக்கையூட்டினார்.

“தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கதாநாயகன் சந்தானமும் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். திரை உலகில் எனது மறுபிரவேசம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமையும் என எதிர்பார்க்கவே இல்லை. இம்மூவரது கூட்டணியில் நானும் இணைய வாய்ப்பு கிடைத்து இருப்பதை என் திரைப்பயணத்தின் மிக முக்கியமான திருப்பமாகக் கருதுகிறேன்.

“பள்ளி நாள்கள் முதலே நான் சந்தானத்தின் தீவிர ரசிகை. அவரது வசனங்கள், உடல் மொழி என அனைத்தையும் ரசிப்பேன். இன்று அவருடனேயே இணைந்து நடிப்பதை நினத்தால் பிரமிப்பாக உள்ளது. எனக்கு மட்டும் அல்லாமல், சினிமாவில் முன்னுக்கு வர நினைக்கும் பலருக்கு அவர் உதவிகரமாக உள்ளார்.

“நன்றி உணர்வு மிக்கவர் என்பதால்தான் தன்னுடன் இணைந்து பயணிக்க பலருக்கு தொடர்ந்து வாயப்பு அளித்து வருகிறார். ‘தோல்விகளைப் பெரிதாக நினைக்க வேண்டாம். அவை பொதுவாக நடக்கக் கூடியவைதான். நம்முடைய கடின உழைப்பு மட்டுமே பேசப்பட வேண்டும். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கத் தொடங்கி விட்டால் எந்த வருத்தமும் இருக்காது’ என்று சந்தானம் அறிவுரை கூறினார். அதை எப்போதும் மனதிற்கொள்வேன்,” என்று சொல்லும் ராதிகா பிரீத்தி தமிழில் தமக்குத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம்.

அடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எவிடன்ஸ்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ராதிகாவுக்கு அறவே ஒப்பனை கிடையாதாம். தெலுங்கில் இணையத் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்