‘திரைப்படத் துறையை விட்டு விலக நினைத்தேன்’

‘திரைப்படத் துறையை விட்டு விலக நினைத்தேன்’

2 mins read
6fccacff-88ee-43e9-8d75-4b42b0c301c4
நடிகர் கமல்ஹாசனுடன்  இளம் நடிகர் காளிதாஸ். - படம்: ஊடகம்

திரைப்படத் துறையை விட்டே விலகிவிடலாம் என்று ஒரு காலக்கட்டத்தில் தாம் முடிவெடுத்ததாகச் சொல்கிறார் இளம் நடிகர் காளிதாஸ்.

இவர் மூத்த நடிகர் ஜெயராமின் வாரிசு. தந்தையின் பரிந்துரை இல்லாமல் தனது திறமையின் மூலம் வாய்ப்புகளைப் பெற விரும்புவதாகச் சொல்கிறார்.

‘விக்ரம்’ படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளார் காளிதாஸ் ஜெயராம்.

தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார் இவர்.

மலையாளத்தில் இவர் நடித்த ‘ரஜனி’ என்ற படம் தமிழில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

“இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வினில் என்னிடம் கூற வந்தபோது, மனதில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. சரி கேட்டுத்தான் பார்ப்போமே என் மனநிலைதான் இருந்தது.

“ஆனால் அவர் கதை சொல்லும்போதே இந்தப் படத்தை மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் வெளியிடலாம் என்று தோன்றியது. காரணம், இப்படத்தின் கதைக்களம் சென்னை என்பதுதான்.

“மேலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் இந்தக் கதை பொருத்தமாக இருக்கும்,” என்கிறார் காளிதாஸ்.

கமலுடன் மீண்டும் ‘இந்தியன்-2’ படத்துக்காக இணைந்துள்ள இவருக்கு இப்படத்தில் சிறிய கதாபாத்திரம்தானாம். எனினும், இயக்குநர் சங்கர் அழைப்பு விடுத்ததும் உடனே ஓடோடிச் சென்று அவரைச் சந்தித்தாக கூறுகிறார்.

“மேலும் இது கமல் நடிக்கும் படம். அதனால் தயக்கம் ஏதுமில்லை. சிறிய வேடத்தில் நடிக்க சம்மதம்தானா என்று இயக்குநர் சங்கர் கேட்டார். அதற்கு உங்கள் பின்னால் சும்மா நடந்துவரச் சொன்னாலும்கூட நான் தயார் என்றேன்.

“படப்பிடிப்பின்போது அவர் எவ்வாறு ஒரு படத்தை திட்டமிட்டு படமாக்குகிறார் என்பது குறித்துதான் அதிகம் கேட்டறிந்தேன்.

“சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் எனக்குப் பெயர் வாங்கித் தரவில்லை, எந்தப் படமும் பெரிய வெற்றியும் பெறவில்லை.

“உண்மையாகவே திரைத்துறை எனக்கான இடம்தானா, நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் தோன்றும். அந்தச் சூழ்நிலையில் ‘பாவக் கதைகள்’ என்ற படம் என்னை தொடர்ந்து திரைத் துறையில் இயங்க வைத்தது.

“இப்போது நல்ல வாய்ப்புகளைப் பெற்று, தொடர்ந்து நடித்து வருகிறேன்,” என்கிறார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

குறிப்புச் சொற்கள்