தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதற்காகவும் அவசரப்பட மாட்டேன்: ஹரிஷ்

3 mins read
b48d0682-903e-49e9-9ef0-daec135c81d6
ஹரிஷ் கல்யாண். - படம்: ஊடகம்

புதுப்படங்களை ஏற்றுக் கொள்வதில் தான் அவசரம் காட்டவில்லை என்கிறார் ஹரிஷ் கல்யாண்.

மேலும், ஒரே மாதிரியான கதைகளில் நடிக்க தமக்கு விருப்பம் இல்லை என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியீடு காணும் முன்பே திரை உலகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றது.

“இயக்குநர் ராம் இப்படத்தின் கதை, திரைக்கதையை என்னிடம் கொடுத்து படித்துப் பார்க்க சொன்னார். முழுமையாக படித்து முடித்தபோது ஒரு பார்வையாளனாக மட்டும் இந்தப் படத்தை பார்க்க முடியாது என்பதும், இந்தக் கதையில் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என்பதும் நன்கு புரிந்தது.

“நான் மட்டும் அல்லாமல் படத்தைப் பார்க்கும் ரசிகர்களும் இப்படித்தான் கருதுவார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

“காரணம் அவ்வளவு நேர்த்தியாக கதையை அமைத்திருந்தார் இயக்குநர் ராம். ஒரு கார் நிற்கும் இடத்திற்காக ஹரிஷும், எம்.எஸ்.பாஸ்கரும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கின்றன.

“இதனால் இருவரையும் சுற்றி இருப்பவர்கள் நிம்மதி இழக்கிறார்கள் என்பதுதான் கதை. சிறுவயதிலேயே எனக்கு இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. நான் எனது சைக்கிளை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வேறு ஒருவரின் மிதிவண்டி இருந்தது.

“இதனால் அந்த சைக்கிளை வேறு இடத்தில் வைத்து விட்டு எனது வழக்கமான இடத்தில் எனது சைக்கிளை நிறுத்தினேன்.

“இதனால் எனக்கும் நான் அப்புறபடுத்திய மிதிவண்டி உரிமையாளருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்தச் சம்பவம் என்னை வருத்தமடையச் செய்தது,” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.

“இதே போல் இணையத்தில் ஒரு சம்பவம் குறித்து படித்தேன். ஒரே அறையில் தங்கி இருந்த இளையர்கள் இருவரிடையே வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் முடிவில் ஒரு மூன்றாம் நபர்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெரிய வந்தபோது இருவரும் சேர்ந்து அவரைக் கொன்று விட்டனராம்.

“கிராமங்களிலும், சிற்றூர்களிலும்கூட இதேபோன்ற பிரச்சினைகள் உள்ளதை நினைத்தால் வியப்பாக உள்ளது,” என்று சொல்லும் ஹரி தமிழில் அடுத்து ’டீசல்’ ’லப்பர் பந்து’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

2010ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ படத்தின் மூல்ம் தமிழில் அறிமுகமான பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஹரீஷ். ஒரே சமயத்தில் பல படங்களை ஒப்புக்கொள்வதில் இவருக்கு விருப்பம் இல்லையாம்.

ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், ஆனால் அந்தப் படம் உருப்படியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இவரது எதிர்பார்ப்பு.

“நான் நடித்த சில படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. சில படங்களுக்குப் பூசை போட்ட கையோடு முடிவுரை எழுதி விட்டனர்.

“மற்றொரு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட போதிலும் இன்னும் வெளியீடு காணவில்லை.

“இதுபோன்று மேலும் பல சோகமான சம்பவங்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறேன். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதில் இருந்து கற்றுக்கொள்ள பத்து அம்சங்களாவது இருக்கும். “அடுத்தக்கட்டத்திற்குச் செல்லும்போது இவை எல்லாம் நமது முன்னேற்றத்திற்கான காரணிகளாக மாறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.

ஹரீஷின் கொள்கையை கோடம்பாக்கத்தில் சிலர் விமர்சிக்கிறார்கள். எனினும் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில் இவர் உறுதியாக உள்ளார். சம்பள விஷயத்திலும் இவர் கறார் காட்டுவதில்லை.

ஹரிஷ் கல்யாண் விரைவில் படப்பிடிப்புக்காக துபாய், இலங்கைக்கு செல்ல உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, இருப்பினும் அது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்