ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவருகிறது.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாபி தியோல் முதலியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியில் கலவையான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
தந்தை மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகனின் கதையாக வெளியாகி இருக்கிறது ‘அனிமல்’ திரைப்படம். பெரும்பாலான ரசிகர்களின் மனதை வென்றிருப்பது வசூல் ரீதியில் உண்மையாகியுள்ளது.
பாலிவுட் சினிமா வரலாற்றில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூலை குவித்திருக்கும் ‘அனிமல்’ திரைப்படம், முதல் வார இறுதியில் இந்தியாவில் மட்டும் ரூ.201 கோடியை எட்டி மிரட்டி வருகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி வெளியான ‘அனிமல்’ திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.
தந்தை பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகனின் மனப்போராட்டமாய் நகரும் கதாபாத்திரத்தில் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் செல்லும் ரன்பீர் கபூர், சமூக வலைத்தளங்களில்கூட ரசிகர்களை ஆட்கொண்டு வருகிறார்.
தனது சகோதரிக்காக கண்ணாடி அறையில் கையில் துப்பாக்கியோடு ரன்பீர் முதன்முதலாக வரும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு காட்சியாக இருந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் ‘அனிமல்’ திரைப்படம், திரையரங்குகளிலும் மக்கள் ஆதரவை மங்காமல் வைத்து வருகிறது.
முதல்நாளில் அதிகப்படியான வசூலுடன் முதல் வாரத்தின் முடிவில் ரூ.201 கோடியாக இருந்த இப்படம் 5வது நாள் முடிவில் உலகளவில் ரூ.481 கோடியை ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘டி-சீரிஸ்’ தெரிவித்துள்ளது.
இது ரன்பீரின் முந்தைய படமான ‘பிரம்மாஸ்திரா’வின் இரண்டு விதமான வசூலையும் முறியடித்துள்ளது.
இதன்மூலம் உள்நாட்டு வசூலில் 300 கோடியை நெருங்கியிருக்கும் ‘அனிமல்’ திரைப்படம், பாலிவுட்டின் ‘பதான்’, ‘கதார் 2’, ‘ஜவான்’ படங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் ரூ.500 கோடியைத் தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, ஆந்திராவில் மிக்சாங் புயல் காரணமாக வசூல் சற்று பாதிப்படைந்துள்ளது.
இருந்தாலும் இன்னும் ஓரிரு நாள்களில் நிலைமை சீரானதும், வார இறுதி நாள்களான விடுமுறை தினங்களை முன்னிட்டு வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வசூலை வைத்து பார்த்தால், ‘அனிமல்’ திரைப்படம் விரைவில் இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடியைக் கடந்து விடும் என்ற எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகரித்து உள்ளது.

