விமர்சனத்துக்கு ஆளாக விரும்பவில்லை; எந்தப் பட்டமும் வேண்டாம் என்கிறார் நயன்தாரா

விமர்சனத்துக்கு ஆளாக விரும்பவில்லை; எந்தப் பட்டமும் வேண்டாம் என்கிறார் நயன்தாரா

2 mins read
97a8b85c-da5e-47e2-8f87-890a78cc54a2
‘அன்னபூரணி’ படத்தில் நயன்தாரா. - படம்: ஊடகம்

தம்மை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நயன்தாரா.

இதனால் ஒரு தரப்பினரின் விமர்சனத்திற்கு ஆளாவதை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய அனுமதி இல்லாமல் எனது பெயருக்கு முன்னால் எந்த பட்டத்தையும் குறிப்பிடக்கூடாது எனப் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் எனக்குத் தெரியாமல் பட்டப்பெயரைச் சேர்த்து விடுகிறார்கள்.

“நான் இன்னும் பட்டப் பெயரை சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லையா அல்லது ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்குப் பட்டப் பெயர் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

“ஒரு பட்டத்தைச் சூட்டி என்னைப் பற்றி பத்துப் பேர் பெருமையாக பேசுகிறார்கள் என்றால் ஐம்பது பேர் என்னைத் திட்டுகிறார்கள்,” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

எந்தப் பட்டத்தை நோக்கியும் தனது திரைப்பயணத்தை அமைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தன் மீதான அன்பு காரணமாக சிலர் தமக்கு இந்தப் பட்டத்தை கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

“லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நான் கேட்கவில்லை. அது என் மீது உள்ள அன்பின் காரணமாக கொடுக்கப்பட்ட பட்டம். தயவு செய்து எனக்குப் பட்டபெயர் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக இவர் நடிக்கும் படங்களின் தலைப்பில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் இடம்பெற்று வருகிறது.

இதற்கு முதலில் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பிறகு அத்தரப்பு நயன்தாராவை அதிகம் விமர்சிக்கவில்லை.

மேலும், நயன்தாரா தனி கதா நாயகியாக நடிக்கும் படங்களில் மட்டுமே அவருக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் படங்களிலும் தமது பெயருக்கு முன்னால் இந்தப் பட்டம் இடம்பெற வேண்டும் என்று நயன்தாரா தரப்பு மறைமுகமாக வலியுறுத்திய பிறகே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே, முன்னணி நாயகர்களின் ரசிகர்கள் நயன்தாராவை சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

குறிப்புச் சொற்கள்