விக்னேஷ் சிவன் இயக்கும் ‘LIC’ படத்தின் பட பூஜையில் கீர்த்தி ஷெட்டியுடன் கலந்துகொண்டார் பிரதீப் ரங்கநாதன்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ‘ஏகே 62’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தி அளிக்கவில்லை. அதனால் படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்தது லைகா நிறுவனம்.
அதனால் மனமுடைந்துபோன விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாரா துவங்கியுள்ள நிறுவனங்களின் பணிகளிலும் தயாரிப்பு நிறுவன பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ள ‘LIC’ படத்தின் பூஜை நேற்று முன்தினம் சென்னையில் எளிமையாக நடந்தது.
மேலும் இதில் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. விரைவில் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு பூஜை போட்டவுடன் நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவனை எச்சரிக்கும் விதமாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “LIC என்ற தலைப்பை நான் 2015ஆம் ஆண்டே பதிவு செய்திருக்கிறேன். இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்த பெயரை தரக்கோரி எனது மேலாளரை அணுகினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் ‘LIC’ என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும் கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.
“ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல; எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.
“இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நயன்தாராவும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

